சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது தினந்தோறும் சுவாமி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதியுலா செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின்போது தினந்தோறும் வீர அழகர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா செல்வார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை நேற்று இரவு நடைபெற்றது . அதனை தொடர்ந்து பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை குதிரை வாகன உரிமைதாரர் நாகலிங்கம் வாரிசுதாரர்கள் சீரமைத்த வெள்ளை குதிரை வாகனத்தில் வெண்பட்டு உடுத்தி எழுந்தருளிய வீர அழகர் முக்கிய வீதிகளின் வழியே வீதியுலா வந்து அங்கு அமைக்கப்பட்டுஇருந்த மண்டகப்படிகளுக்கு காட்சி கொடுத்த பின்னர் காலை 8:15 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகை ஆற்றில் இறங்கினார்.
அப்போது கள்ளழகர் வேடம் பூண்டு வந்த ஏராளமான பக்தர்கள் வீர அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.பின்னர் வீர அழகர் ஆற்றுக்குள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த பின்பு ஆற்றுக்குள் இருந்த சப்பரத்திற்கு எழுந்தருளினர்.அதனை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர் . அதனைத்தொடர்ந்து வீர அழகர் தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.
