கும்பிளே- விராட் கோலி சர்ச்சை; இந்திய கிரிக்கெட் வாரிய கமிட்டி முன்னாள் தலைவர் பரபரப்பு தகவல்!!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே, அப்போது அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முடிந்ததும் திடீரென ராஜினாமா செய்தார். கோலியின் கடுமையான எதிர்ப்பு காரணமாக கும்பிளேவின் பதவி காலம் ஓராண்டுக்குள் முடிவுக்கு வந்தது.
அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டி நிர்வகித்தது. 33 மாதங்கள் அந்த பணியில் நீடித்த வினோத் ராய், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பணியில் இருந்த போது நடந்த சில சர்ச்சைகளை தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். குறிப்பாக 5 ஆண்டுக்கு முன்பு நடந்த கும்பிளே- கோலி இடையிலான மோதல் போக்கு குறித்து அவர் எழுதியிருப்பதாவது:-
இந்திய கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தினரிடம் நான் பேசியதில் இருந்து, ஒழுக்கம், கட்டுப்பாடு விஷயத்தில் கும்பிளே மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது பெரிய அளவில் மகிழ்ச்சி இல்லை என்று தெரிவித்தனர்.
பிறகு கேப்டன் விராட் கோலியிடம் தனியாக பேசினேன். கும்பிளேவின் செயல்பாடு அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களை அச்சுறுத்தி தனது விருப்பத்தை செய்ய வைக்கிறார் என்று கூறினார். அதன் பிறகு தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் கமிட்டியிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்தோம்.
இறுதியில் கும்பிளேவை மீண்டும் பயிற்சியாளராக நியமிக்க கிரிக்கெட் கமிட்டி பரிந்துரைத்தது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் முடிந்து இங்கிலாந்தில் இருந்து தாயகம் திரும்பிய கும்பிளேவிடம் நீண்ட நேரம் உரையாடினோம். அணிக்குள் நடந்த விவகாரங்களால் அவர் மிகுந்த வேதனையில் இருந்தார். தன்னை நடத்திய விதம் நியாயமற்றது என்று நினைத்தார்.
இந்த விஷயத்தில் கேப்டனுக்கோ அல்லது அணிக்கோ அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கக்கூடாது. ஒரு சீனியராக வீரர்களுக்கு ஒழுக்கத்தையும், தொழில்முறைகளையும் கற்றுக்கொடுப்பது பயிற்சியாளரின் கடமை. இதை உணர்ந்து வீரர்கள் தனக்கு மரியாதை அளித்திருக்க வேண்டும் என்பதே கும்பிளேவின் எண்ணமாக இருந்தது.
ஆனால் கோலியின் கருத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால், கும்பிளேவின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாததாகி விட்டது. இருப்பினும் இந்த பிரச்சினையில் கும்பிளேவும், கோலியும் வெளிப்படையாக எதையும் விவாதிக்காமல் கண்ணியமாக நடந்து கொண்டனர். இல்லாவிட்டால் சர்ச்சை தொடர்ந்திருக்கும்.”
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.