விளம்பர பலகை வைத்ததால் வழக்கு: அதிரடியில் இறங்கியது மாநகராட்சி!!

கோவையில் சாலை சந்திப்புகள், ரோட்டோரங்கள் மற்றும் தனியார் நிறுவன கட்டடங்களின் மேற்கூரை என பல்வேறு இடங்களில், பிளக்ஸ் பேனர் மற்றும் ‘ஹோர்டிங்ஸ்’ எனப்படும், விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.

வாகன ஓட்டிகள் கவனத்தை திசை திருப்பும் வகையில், ரோட்டில் எந்த ஒரு பகுதியிலும் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது என, ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியிருக்கின்றன. அதை மீறி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் அனுமதியின்றி, கோவை நகர் பகுதியில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் ஆய்வு செய்து அகற்றினாலும், சில நாட்கள் கழித்து மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.மாநகராட்சி மத்திய மண்டலம், 71வது வார்டு, திருச்சி ரோடு, சுங்கம் சந்திப்பில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர் கட்டடத்தில் இருந்த விளம்பர பலகை, மூன்று மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டு, மீண்டும் வைக்கக் கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அறிவுறுத்தலை மதிக்காமல், அதேயிடத்தில் மீண்டும் விளம்பர பலகை வைக்கப்பட்டிருப்பது, நகரமைப்பு பிரிவினர் ஆய்வில் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக, மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் பாபு கொடுத்த புகார் அடிப்படையில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.