14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: நாராயணசாமி தகவல். புதுச்சேரி,
முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பினை தொடர்ந்து அவசரகால பயன்பாட்டிற்கு 2 மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட மருந்துகள் தயாராக உள்ளன. புதுவையில் தடுப்பூசி போடுவது தொடர்பான ஒத்திகை வெற்றிகரமாக நடந்துள்ளது.
இதையடுத்து தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 14 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. அதில் 13 ஆயிரம் பேர் பதிவு செய்து உள்ளனர்.2-வது கட்டமாக தடுப்பூசி காவல், வருவாய், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுப்பணித்துறையினர், துப்புரவு பணியாளர் என கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு போடப்பட உள்ளது. இன்னும் 10 நாட்களில் மருந்து வந்துவிடும் நிலை உள்ளது.
புதுவைக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன்ரெட்டி வந்தபோது கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக தருவோம் என்றார். இலவசமாக கிடைக்காவிட்டாலும் மாநில நிதியில் இருந்து தடுப்பூசி போட தயாராக உள்ளோம். 3-வது கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு வியாதி உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். ஆனால் இதுகுறித்து மத்திய அரசிடமிருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை.
புதுவை மாநிலத்தில் 33 சதவீதம் பேருக்கு தொற்று பரிசோதனை செய்துள்ளோம். இப்போது நாள் ஒன்றுக்கு 0.8 சதவீதம்தான் பாதிப்பு உள்ளது. கொரோனா தடுப்பு மருந்துகளை புதுவையில் 36 இடங்களிலும், காரைக்காலில் 13 இடங்களிலும், மாகியில் 3 இடத்திலும், ஏனாமில் ஓரிடத்திலும் சேமித்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பு மருந்தின் விலை ரூ.1000 என்று கூறப்படுகிறது. இதை குறைத்தால் நன்றாக இருக்கும். தேவைப்படுபவர்கள் அதை வாங்கி பயன்படுத்திக்கொள்வார்கள்.
இந்தியாவிலேயே புதுவையில்தான் அதிகம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். அதேபோல் வு குணமடைவதும் இங்குதான் அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ரஹ்மான் செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்.