நில் கவனி பல்!!!
“பல் மருத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு பலருக்கு இல்லை. குழந்தைகளின் பால் பற்களில் பாதிப்பு ஏற்பட்டால், ‘பால் பல் தானே..! விழுந்து, புது பல் முளைக்கும் போது சரியாகிவிடும்’ என்ற கருத்தே தவறானது’’ என்கிறார் பல் மருத்துவர் சோபியா ராமராஜா. குழந்தைகளின் தாடை எலும்பில் பால் பற்களுக்கு கீழ், அடுத்து மேலே வரும் நிரந்தர பற்கள் அமைந்திருப்பதினால் பால் பற்களில் சொத்தை ஏற்பட்டிருந்தால் கீழே உள்ள நிரந்தர பற்களை பாதிக்கும். இதை தவிர்க்க பால் பற்களை சொத்தை வராமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
பற்களில் ஏற்படும் பிரச்னை வெளியே தெரியாது. எக்ஸ்ரேல தான் தெரியும். அவ்வாறு பால் பற்களில் பாதிப்பு ஏற்பட்டு நீக்க நேரிட்டால் அந்த இடத்தில் நிரந்தர பல் வரும் வரை பாதுகாக்க வேண்டும்.
வேர் சிகிச்சை
ஒரு பல்லை எனாமல், டென்டைன் மற்றும் பல்ப் என்று மூன்று பகுதியாக பிரிக்கலாம். எனாமலில் சொத்தை ஏற்பட்டால் பற்களின் மேல் பகுதி கருப்பாக இருக்கும் அவ்வளவுதான். அதற்கடுத்த டென்டைன் சல்லடை போன்றது. அந்த இடத்திற்கு சொத்தை போகும் போது லேசாக கூச்சம் ஏற்படும். ஒவ்வொரு முறையும் சூடான அல்லது குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடும் போது அதிக பாதிப்பு அதிகமாகும். சல்லடை மாதிரி இருப்பதினால் சீக்கிரமாக சொத்தை கீழ்நோக்கி போகும் போது பாதிப்பு பல்ப்பினை அடைகிறது.
பல்ப்பில்தான் நரம்பு மற்றும் ரத்தநாளங்கள் இருக்கிறது. அங்கு பாதிப்பு ஆகும் போது தான் வலி ஏற்படுகிறது. அந்த நேரம் வலியினை குறைக்க வலிக்கு மாத்திரை போட்டு தற்காலிகமாக சரி செய்து கொள்கிறோம். ஆனால் சொத்தை அதோடு நில்லாமல் பல்லின் வேர் வழியாக கீழே போய் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அப்போது தான் மருத்துவரை பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். அந்த சமயத்தில் மருத்துவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு வேர் வழியாக போய் சுத்தம் செய்வது தான். இது தான் வேர் சிகிச்சை எனப்படுகிறது. Enamel-லேயே பிரச்சனை இருக்கும் போது வந்திருந்தால் வெறும் ஃபில்லிங் கோடு முடிந்திருக்கும். இதை ஒரு முறை செய்தால் போதும்.
இதுவே டென்டைனை பாதிக்கும் போது, கால்சியம் ஹைட்ராக்சைடு பேஸ்ட் கொண்டு டெம்ப்ரவரி ஃபில்லிங் கொடுக்கப்படும். இதனையடுத்து மூன்று மாதம் கழித்துதான் நிரந்தரமாக சிகிச்சை அளிக்க முடியும். டென்டைன் சிகிச்சை அல்லது எந்த ஃபில்லிங் செய்தாலும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிசோதிப்பது நல்லது.
பல்லிற்கு தடுப்பூசி…
நோய் எதிர்ப்பு சக்திக்காக தடுப்பூசி போடுகிறோம். அதே போல் பல்லிற்கும் உள்ளது. இதை ஃப்ளூரைட் அப்ளிகேஷன் என்று அழைப்போம். ஜெல் அமைப்பு கொண்ட இதனை மூன்றரை வயது முதல் நிரந்தர பல் முளைக்கும் ஆறு வயதில், 13 வயதில், 21 வயதில் என நான்கு தவணையாக கொடுக்க வேண்டும். இதை போட்டால் கண்டிப்பாக சொத்தை வராது என்கிற உத்தரவாதம் கொடுக்க முடியாது என்றாலும், 80% பாதுகாப்பு உறுதி.
பல் பிடுங்குவது நல்லதா?
பல் எடுக்க நான் பரிந்துரைக்க மாட்டேன். ஒரு பல் எடுத்துவிட்டால் அதற்கு மாற்று பல் வைக்க வேண்டும். பல் என்பது நம் உடலின் ஒரு பகுதி. அந்த பகுதியை வெட்டி வீசுகிறீர்கள். அதற்கு சப்போட்டிவாக இருக்கக் கூடிய மற்ற பகுதி தேய்மானமாக ஆரம்பிக்கும். ஒரு பல் எடுக்க போய் பக்கத்திலிருக்கக் கூடிய பல்லின் சப்போர்ட்டை இழக்க நேரிடும். கீழ் பல்லாக இருந்தால் மேல் ஏறும். மேல் பல்லாக இருந்தால் கீழ் இறங்கும். இதுவும் நடக்கும். எனவே தேவையின்றி பல் எடுப்பது நல்லதல்ல.
எந்த பல் எடுப்பது எளிது…
ஆடுகிற பல் எடுப்பது எளிது. எனவே பல் ஆடும் போது மருத்துவரை பார்த்து எடுத்துக் கொள்ளலாம் என்று சிலர் இருப்பார்கள். இதற்கு ஓர் உதாரணத்தோடு சொல்ல வேண்டுமென்றால், சாலையில் நடந்து போகும் போது ஒரு குழியில் சேர் இருக்கிறது. அதை தெரியாமல் மிதித்துவிடுகிறோம். அந்த நேரத்தில் சேற்றிலிருந்து கால் எடுப்பது எளிதா? நிலத்திலிருந்து கால் எடுப்பது எளிதா? இதை அப்படியே பல்லிற்கும் பொருத்தி பார்த்தால் ஆடாத பல்லாக இருக்கும் போது பத்தே நிமிடத்தில் எல்லா பற்களும் எடுத்துவிடலாம்.
அதே வேளையில் ஒரு பாட்டியை அழைத்து வந்து எல்லா பல்லும் ஆடுகிறது, எடுப்பது எளிது தானே? என்று கேட்டால், வெறும் ஆடுகிறது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆடுகிறது, பாதிக்கப்பட்டிருக்கிறது என்றால் தான் பிரச்சனை. அதாவது சேற்றில் மாட்டிய கால் போல் பாதிக்கப்பட்ட பல். அது என்னதான் ஆடினாலும் பாதிப்பினால் இழுக்க இழுக்க உள்ளே போய்க் கொண்டே இருக்கும். அதை எடுப்பது தான் ரொம்ப கஷ்டம். எனவே ஆரம்பத்திலேயே தெளிவாகவும் பார்த்துவிட்டால் எந்த பிரச்சனையும் கிடையாது. அதேபோன்று பல் லேசாக வலிக்கும் போதே மருத்துவரை அணுகுங்கள்.
எந்த வயதில் கிளிப் போடலாம்
11-12 வயது வரைக்கும் பல் சம்பந்தமாக சிகிச்சை அவசியமில்லை. 12 வயதிற்கு மேல் தான் கிளிப் போட வேண்டும். சிறு குழந்தையாக இருக்கும் போது பற்கள் வரியாகவும், அழகாகவும் இருக்கும். பால் பற்கள் விழுந்து அடுத்தடுத்து பற்கள் முளைக்கும் போது பெரிதாகவும், சிறியதாகவும் முளைக்கும். எல்லா பற்களும் விழுந்து, முளைக்கும் வரை காத்திருக்க வேண்டும். 10-13 வயது வரை ugly duckling ஸ்டேஜ் என்று சொல்வோம். இது தெரியாமல் 10 வயதிலேயே குழந்தையின் பல் அசிங்கமாகிவிட்டது என்று கிளிப் போட்டுக் கொள்கிறார்கள். அதை முடிந்தளவு தவிர்ப்போம். எல்லா பற்களும் முளைத்த பிறகே கிளிப் போடுவது குறித்த சிகிச்சை எடுக்கலாம்’’ என்று ஆலோசனை வழங்கினார் பல் மருத்துவர் சோபியா ராமராஜா. கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டு மீண்டவர்கள் dental checkup செய்வது அத்தியாவசியமானது. உங்களை கருப்பு பூஞ்சை நோயில் இருந்து ஆரம்ப காலத்திலேயே
காத்துக் கொள்ளலாம்.
பல் மருத்துவம் என்பது பழமையான மருத்துவத் தொழில்களில் ஒன்றாகும். இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது. கி.மு 7000களில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்துடன் கூட காணப்படுகிறது. இருப்பினும் கி.மு 5000 வரை இது ஒன்றும் பெரிதாகப் பேசப்படவில்லை. அதன் பின்னரே பல் மற்றும் பற்சிதைவு தொடர்பான தகவல்கள்/பதிவுகள் கிடைத்தன. சமீப காலமாகத்தான், பல்லின் ஆரோக்கியம், உடலின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. கிமு 2686களில் எகிப்தில் வாழ்ந்த டாக்டர் ஹெஸி-ரா (Dr.Hesy-Ra), 2017ம் ஆண்டு பதிவிட்ட தகவலின்படி உலகின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட மருத்துவர் ஆவார். ரபியுதீன் அகமது, இந்தியாவில் நவீன பல் மருத்துவத்தின் தந்தை என்று நினைவு கூறப்படுகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.