உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது: பிரதமர் மோடி!!
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின் பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உக்ரைனின் தற்போதைய நிலை குறித்து பிரதமரிடம் ரஷ்ய அமைச்சர் விவரித்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் போரை நிறுத்த பல்வேறு நாடுகளுடன் நடத்திவரும் பேச்சு வார்த்தைகளின் விவரம் குறித்தும் ரஷ்ய அமைச்சர் விளக்கினார் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இதை தொடர்ந்து உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் எவ்வகையான பங்களிப்பிற்கும் இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியா விரும்பினால் பங்கேற்கலாம் என ரஷ்ய அமைச்சர் லாவ்ரோவ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவுடன் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி தங்கள் மீதான தாக்குதலை நிறுத்த இந்தியா முயற்சிக்க வேண்டுமென தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். உக்ரைன் மீது போர் தொடங்கியபோது ரஷ்ய அதிபர் புடினுடன் 3 முறையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் 2 முறையும் பிரதமர் தொலைபேசியில் பேசியிருந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.