மீண்டும் ஆள் திரட்டும் நக்சல்கள்? சேலத்தில் டி.ஜி.பி., ஆலோசனை!
சேலம் : சேலத்தை மையமாக கொண்டு நக்சல்கள், ஆள் சேர்ப்பு மற்றும் ஆயுத பயிற்சிக்கு சதித் திட்டம் தீட்டியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ‘க்யூ’ பிரிவு உள்ளிட்ட உளவு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவரது மனைவி கலா, 50; தங்கை சந்திரா, 47, ஆகியோர் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் 2002ல், தமிழகத்தில் நக்சல் இயக்கத்தை துவக்கினர்.இதில் சேர்ந்தவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததுடன், இளைஞர்களை மூளை சலவை செய்து, தங்கள் இயக்கத்தில் இணைக்கும் பணியையும் மேற்கொண்டனர்.
மூவரும் தலைமறைவான நிலையில், தமிழக க்யூ பிரிவு போலீசார் 2016ல் கரூரில் கலா, சந்திராவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். மணிவாசகத்தை, கேரள போலீசார் 2020ல், ‘என்கவுன்டர்’ செய்தனர். அவரது உடல், சொந்த மாவட்டமான சேலம், தீவட்டிப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, சுடுகாட்டில் கூடிய நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ‘பழிக்குப்பழி, ரத்தத்துக்கு ரத்தம்’ என, கோஷம் எழுப்பினர். அதன் அடிப்படையில், 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையில், ஜாமினில் வந்த கலா, தற்போது தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன், மதுரையைச் சேர்ந்த விவேக், தர்மபுரியைச் சேர்ந்த ‘பொடா’ பாலன், சீனிவாசன், சித்தானந்தம், சேலம், செட்டியம்பட்டியைச் சேர்ந்த இளங்கோ ஆகியோர், தங்களது சொந்த ஊர்களின் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.