ஆப்கானிஸ்தானுக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி திரட்ட ஐ.நா. நடவடிக்கை!!
ஆப்கானிஸ்தானில் 21 ஆண்டுகளாக நடந்து வந்த போரின் முடிவில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை தலீபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றினர். எந்த நேரமும் கைகளில் துப்பாக்கிகளுடன் அலையும் தலீபான்கள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பெண்களுக்கு சமத்துவமும், சம நீதியும் மறுக்கப்படுகிறது. பெண்களுக்கு கல்விகூட மறுக்கப்படுகிறது.
சமீபத்தில் அங்கு கல்வியாண்டு தொடங்கி பள்ளிகள் திறந்தபோது, பெண்களுக்கான பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளிகளுக்கு சென்ற மாணவிகள் கண்ணீருடன் வீடு திரும்பினர். தலீபான்களின் இத்தகைய போக்கால் அந்த நாட்டுக்கு உதவி செய்ய முன்வந்தவர்கள் கூட பின்வாங்கத்தொடங்கி விட்டனர். இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் கவலைக்கிடமான நிலைக்கு சென்று விட்டது.
அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அங்கு வாழ்கிற 2 கோடியே 30 லட்சம் மக்களுக்கு உணவு பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் கூடி பட்டினியால் தவிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில் மனிதாபிமான நெருக்கடியில் சிக்கித்தவிக்கிற அந்த நாட்டுக்கு உதவுவதற்காக ஐ.நா. தொண்டு அமைப்பு 4.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.33 ஆயிரம் கோடி) நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்த அமைப்பு, இங்கிலாந்து, ஜெர்மனி, கத்தார் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவரான மார்ட்டின் கிரிபித்ஸ், இதுபற்றி ஜெனீவாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:-
உக்ரைன் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கைக்காக எங்கள் ஆன்மாவுக்கு அழைப்பு விடுக்கிறது. நாங்கள் இப்போது அழைப்பு விடுத்துள்ள மனிதாபிமான திட்டம், உயிர்களைக் காப்பாற்றுவதாகும்.
அன்றாடம் மக்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையைத் தக்க வைக்க பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த பயங்கரமான சூழலில் ஒரு நாட்டுக்காக இதுவரை தொடங்கப்பட்ட மிகப்பெரிய மனிதாபிமான கோரிக்கைக்கு நிதி அளிக்குமாறு நன்கொடையாளர்களிடம் கேட்கிறோம். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்த மோசமான நேரத்தில் 4.4 பில்லியன் டாலர்கள் வேண்டும்.
நாளையே இந்த இலக்கை அடைய மாட்டோம் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நாங்கள் அதைச் செயல்படுத்துவோம். சர்வதேச சமூகம், மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்டு பிரச்சினைகளில் காலப்போக்கில் தலீபான்களுடன் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.