வாகன வரி : இன்று முதல் அபராதம்!!
சென்னை : ‘வாகனங்களுக்கான காலாண்டு வரி நிலுவையை செலுத்தாதோர், இன்று (ஏப்.,1) முதல் அபராதத்துடன் செலுத்த வேண்டும்’ என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், போக்குவரத்து வாகனங்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு வரி விதிக்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான முதல் காலாண்டு வரியை செலுத்த, மார்ச், 15ம் தேதி கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில், ‘காலாண்டு வரியை அபராதமின்றி செலுத்தும் தேதியை மாற்றியமைக்க வேண்டும்’ என, தமிழக லாரி உரிமையாளர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, போக்குவரத்து துறை கமிஷனர், மார்ச் 31ம் தேதி வரை, காலாண்டு வரியை அபராதமின்றி செலுத்த அவகாசம் வழங்கினார். அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததால், இன்று முதல் அபராதத்துடன் செலுத்த, போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.