மெல்போர்னில் வார்னேவுக்கு நினைவஞ்சலி கூட்டம் – முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பு!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே (வயது 52) விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்டு அவரது குடும்பத்தினர் இறுதிசடங்குகளை செய்தனர். ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்டுகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தி மாயாஜால சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த அவரது மறைவு கிரிக்கெட் உலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு சார்பில் வார்னேவுக்கு மெல்போர்னில் உள்ள எம்.சி.ஜி. மைதானத்தில் நேற்று பிரமாண்டமான நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு தங்களது ஹீரோவுக்கு பிரியா விடை அளித்தனர். 2 மணி நேரம் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆலன் பார்டர், மார்க் டெய்லர், இங்கிலாந்தின் நாசர் ஹூசைன், வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா உள்ளிட்டோர் வார்னே குறித்த தங்களது நினைவுகளை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டனர். மெக்ராத், மைக்கேல் கிளார்க், கில்கிறிஸ்ட், சைமண்ட்ஸ் பிரெட்லீ உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் வந்திருந்தனர். இசை நிகழ்ச்சி, பாடல்கள், காணொலி மூலம் புகழாரமும் இடம் பெற்றன.
இறுதி மரியாதை நிகழ்ச்சியில் பேசிய வார்னேவின் தந்தை கீத், ‘மார்ச் 4-ந்தேதி எங்களது வாழ்க்கையில் கறுப்பு நாள். வார்னே இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த வாழ்க்கையை அவர் மிகவும் விரும்பினார். விளையாட்டுக்காகவே வாழ்ந்தார்’ என்று கூறி கண்ணீர் விட்டார். இதைத் தொடர்ந்து வார்னேவின் மகன் ஜாக்சன், மகள்கள் சம்மர், புரூக் ஆகியோர் தந்தை குறித்து உருக்கமாக பேசினர். ‘அவர் எப்போதும் எங்களுடன் இருப்பார் ’ என்று கூறிய போது சம்மர் கண் கலங்கினார்.
வார்னேவை கவுரவிக்கும் வகையில் அவரது சொந்த ஊரான மெல்போர்ன் மைதானத்தின் கேலரியில் ஒரு பகுதியில் இருந்த ‘கிரேட் சதர்ன் ஸ்டாண்ட்’, ‘ஷேன் வார்னே ஸ்டாண்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த ஸ்டாண்டை வார்னேவின் பிள்ளைகள் திறந்து வைத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.