விவசாயத்திற்கு மாறிய தோனி !
கிரிக்கெட்டிலிருந்து விவசாயத்திற்கு மாறிய தோனி ! காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்யும் முயற்சி !
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது கிரிக்கெட்டில் இருந்து விவசாயத்திற்கு மாறியுள்ளார். சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டனாக இருக்கும் எம்எஸ் தோனி தற்போது தனது 43 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தனது பண்ணை வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எம் எஸ் தோனி தனது ஓய்வினை அறிவித்திருந்தார். இதன் பிறகு தற்போது இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் இருக்கும் பண்ணை வீட்டிலுள்ள 43 ஏக்கர் விவசாய நிலத்தில் இயற்கை முறைப்படி விவசாயம் செய்து வருகிறார்.
தனது விவசாய நிலத்தில் தோனி பப்பாளி, ஸ்ட்ராபெரி, தக்காளி முட்டைகோஸ், பீன்ஸ், ப்ரோக்கோலி, பட்டாணி, ஹாக் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை பயிரிட்டு வளர்த்து வருகிறார். தோனி இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உரத்தை மட்டுமே பயன்படுத்துவதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தோனி பயன்படுத்தும் இயற்கை உரம் சிறந்த விளைச்சலை கொடுத்தால் அந்த உரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விற்கும் வகையில் ஒரு புதிய தொழிலை தொடங்க உள்ளதாக பேசப்படுகிறது.
இந்நிலையில், தோனி பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் தற்போது சிறந்த விளைச்சலைக் கொடுத்துள்ளது. இயற்கை முறையில் விளைவித்த தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகிய பல காய்கறிகள் சிறந்த விளைச்சலைக் தற்போது கொடுத்திருக்கிறது. தோனியின் பண்ணை வீட்டில் இருந்து துபாய்க்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. தோனி விளைத்த காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கு ஜார்கண்ட் மாநில விவசாயத் துறை உதவி செய்கிறது. இதன்மூலம் தோனியின் பண்ணை வீட்டில் விளைந்த காய்கரிகள் அனைத்தும் துபாய்க்கு ஏற்றுமதி செய்வதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.