ஏமனில் அமைதி நிலவுவதற்காக தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது சவுதி கூட்டுப் படைகள்!!

ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதுகுறித்து அரபு செய்தி நிறுவனங்கள், “ இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் அரசியல் பேச்சுக்களுக்கு வளமான சூழலை உருவாக்கவும், அமைதிக்கான முயற்சிகளைத் தொடங்கவும் ஏமனில் தற்காலிக போர் நிறுத்தத்தை சவுதி கூட்டுப் படைகள் அறிவித்துள்ளன. இந்தப் போர் நிறுத்தம் ஏமனில் அமைதி நிலவுவதற்காக அரசியல்ரீதியான பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் என்றும் சவுதி கூட்டுப் படைகள் தெரிவித்துள்ளது. இந்தப் போர் நிறுத்தம் இன்று காலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியிட்டுள்ளன.

சவுதி கூட்டுப் படைகளின் இந்த முடிவை ஐ. நா வரவேற்றுள்ளது ஆனால் சவுதியின் இந்த முடிவை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏமனின் உள்நாட்டுப் போர் கடந்த வாரம் தான் 8-ஆம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறது. தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டுப் போர் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து மன்சூர் ஹைதி தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஏமனின் அதிபராக அலி அப்துல்லா சாலே இருக்கிறார். 7 வருடங்களாக நடக்கும் இந்த உள்நாட்டுப் போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா அரசு செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. 7 வருடங்களாக நடக்கும் ஏமன் உள் நாட்டுப் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.