முதியவர் அடித்துக் கொலை- 5 பேர் கைது!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே முதியவரை அடித்து கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கிள்ளியூர் ஊராட்சி ராமன் கோட்டகம் காலனி தெருவை சேர்ந்தவர் சித்திரன் (70). இவரது மகன் பிரகாஷ் (15) என்பவர் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு (60), கலியபெருமாள் மகன் பாலமுருகன் (35). இவர்களுக்கும், சித்திரன் குடும்பத்திற்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் பிரகாஷ் பள்ளிக்கு செல்லாததால், நேற்று (மார்ச் 29) இரவு அவரது தந்தை சித்திரன் திட்டியுள்ளார். இதனைக் கேட்ட பிச்சைக்கண்ணு, அவரது மனைவி ஜெயலட்சுமி (55), பாலமுருகன், இவரது மனைவி காளியம்மாள் (32), பிச்சைக்கண்ணு மருமகள் ரவி மனைவி பிரியா (30) ஆகிய 5 பேரும் தங்களை தான் சித்திரன் குடிபோதையில் திட்டுகிறார் என அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த சித்திரன் மனைவி அஞ்சம்மாள், மகன் பிரகாஷ் ஆகியோரையும் தாக்கினர். அப்போது மேலும் ஆத்திரமடைந்த பிச்சைக்கண்ணு, அங்கு கிடந்த மூங்கில் கட்டையை எடுத்து சித்திரனை பலமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்து நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சித்திரன் மனைவி, அவரது மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து செம்பனார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைக்கண்ணு, ஜெயலட்சுமி, பாலமுருகன், காளியம்மாள், பிரியா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.