‘என் வெற்றியை தாங்கமுடியாமல் சிலர் தவறான பிரசாரம் செய்கிறார்கள்’ அபுதாபியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

அபுதாபியில் ஐக்கிய அமீரக தமிழகர்கள் சார்பில் ‘நம்மில் ஒருவர்’ எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. துபாய்-அபுதாபியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தொழில் அதிபர்களை டிப்-டாப் உடையில் சென்று சந்தித்து கலக்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையில் மிடுக்குடன் கலந்துகொண்டார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ எனும் பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க அங்குள்ள தமிழர்கள் திரளாக கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டபடி புன்னகை பொங்க மு.க.ஸ்டாலின் விழா மேடைக்கு வந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வந்தார்.

‘நம்மில் ஒருவர்’ நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

துபாய் மற்றும் அபுதாபியில் கொஞ்சம் கூட குறைவில்லாத வரவேற்பால் இந்த5 நாட்கள் நான் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன். தமிழகத்தின் முதல்-அமைச்சராக மட்டுமல்ல, உங்களில் ஒருவனாக என்னை நீங்கள் ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்ச்சி. தமிழ்நாட்டை நோக்கி பல தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான பயணமாக, எனது சுற்றுப்பயணம் வகுக்கப்பட்டு இருந்தாலும், அதைத்தாண்டி சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தை நோக்கி தமிழர்களின் மனங்களை ஈர்க்கின்ற பயணமாக எனது பயணம் அமைந்துள்ளது.

எனது இந்த பயணத்தை தமிழகத்தில் உள்ள அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பயணம் இவ்வளவு வெற்றி அடைந்து உள்ளதே… இவ்வளவு சிறப்பாக நடந்து வருகிறதே… என்று ஒரு சிலருக்கு இந்த வெற்றியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதை திசை திருப்ப வேண்டும், ஒரு தவறான பிரசாரத்தை நடத்திவிட வேண்டுமென்று திட்டமிட்டு, நான் பணத்தை எடுத்துக்கொண்டு வந்திருப்பதாக கூறிக்கொள்கிறார்கள். நான் அரசியல் பேசுவதாக நீங்கள் நினைக்கக்கூடாது. நான் பணத்தை எடுத்துக்கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களின் மனங்களை தான் எடுத்து வந்திருக்கிறேன். அதுதான் உண்மை.

எங்கிருந்தாலும் தமிழர்களது உள்ளத்தில், தமிழர்களுடன் இருக்கிறோம் என்பது தான் எனக்கு முக்கியம். அந்த நட்பின் அடிப்படையில்தான் உங்களைத் தேடி நான் வந்துள்ளேன். அதேபோல என் முகத்தை பார்க்க, இவன் என்ன பேசப்போகிறான்? என்பதை கேட்க நீங்கள் வந்திருக்கிறீர்கள். இதெல்லாம் தமிழுக்கும், தமிழர் நலனுக்கும் எதிராக சிந்திக்க கூடியவர்களுக்கு புரியாது. உண்மையான தமிழனாக இருந்தால் அது புரியும்.

பொய்களையும், அவதூறுகளையும் கட்டமைத்து வெறுப்பு என்கிற நெஞ்சை நெஞ்சில் விதைத்து அதன் மூலம் ஆதாயம் தேடலாம் என்று கணக்கு போடுபவர்களுக்கு இதெல்லாம் புரியாது.

கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக இருந்து, தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொண்டிருக்கிறேன். அதில் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. ஏனென்றால் நான் கலைஞரின் மகன். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி அதுதான் திராவிட மாடல். அந்த திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாங்கள் தமிழகத்தில் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இந்த பயணத்தில் ரூ.6,100 கோடி அளவில் தொழில்கள் தொடங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. துபாய் நிறுவனங்கள் இல்லாமல் ஒரு மாநிலம் வளர முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் எனது முதல் வெளிநாட்டு பயணமாக நான் துபாய் பயணத்தை தேர்ந்தெடுத்தேன். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நமது தாய் மண்ணை நாம் மறந்துவிடக்கூடாது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்துள்ள ஆதாரங்கள் நமது பழமையை பெருமையை பறைசாற்ற கூடியதாக அமைந்துள்ளன. கீழடியில் கிடைத்த பொருட்கள் அடங்கிய மாபெரும் அரங்கத்தை விரைவில் அமைக்க உள்ளோம். கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகங்கை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் தற்போது அகழாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளோம். ஒரு இனம் கடந்த கால வரலாற்றை முழுமையாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அதை ஆவணப்படுத்த வேண்டும். அதை வருங்கால தலைமுறையினருக்கு சொல்லித்தர வேண்டும். இப்படிப்பட்ட வரலாற்றுக்கு நாம் சொந்தக்காரர்கள் என்ற பெருமிதம் நமக்கு வேண்டும். அதேவேளை கடந்த கால பெருமைகளை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், நிகழ்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சி, வர்த்தகத்தில் நாம் முன்னேற வேண்டும். ஒரு கையில் கடந்தகால பெருமிதங்கள், இன்னொரு கையில் எதிர்கால பெரிய உயர்வுகள். இந்த இரண்டுக்கும் முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

என்னை வரவேற்றது போலவே, உங்களையும் தமிழ்நாடு வரவேற்க காத்திருக்கிறது.

‘டூ ஆர் டை’, அதாவது செய் அல்லது செத்துமடி என்ற ஒரு அடுக்கு மொழியில் வசனம் உண்டு. ஆனால் இடையில் உள்ள அந்த ‘ஆர்’ என்ற எழுத்தை நீக்கி பாருங்கள். செய்துவிட்டு தான் சாகவேண்டும். அந்த உறுதியை எடுத்துக்கொண்ட காரணத்தால்தான் பேச்சைக் குறைத்து செயலில் நமது திறமையை காட்டிட வேண்டும் என்ற உணர்வோடு நான் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். இனிமேல் நீங்கள் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் அடிக்கடி நான் துபாய்க்கு வந்து செல்வேன். எப்படியாவது என்னுடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருப்பீர்கள். தமிழ்நாட்டிலேயே அந்த எண்ணம் இருக்கிறது என்றால் இங்கு இல்லாமல் போய்விடுமா? அதனால்தான் நீங்கள் அமர நான் இந்த மேடையில் இருந்து செல்பி எடுத்துக்கொள்கிறேன். அது சமூக வலைதளங்களில் வந்துவிடும். அதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் நின்றபடியே குழுமியுள்ள தமிழர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது திரண்டிருந்த தமிழர்கள் ஆர்ப்பரித்து உற்சாக கோஷம் எழுப்பினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.