துபாய் நாட்டை திரும்பி பார்க்க வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக, கடந்த 24-ந்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., மருமகள் கிருத்திகா ஆகியோரும், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ச.கிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்ணி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
முன்னதாக துபாய் விமான நிலையத்திலேயே அங்குள்ள தமிழர்கள் திரண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
துபாயில் நடந்து வரும் உலக கண்காட்சியில் இந்திய அரங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழக அரங்கை கடந்த 25-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ரிப்பன்’ வெட்டி திறந்து வைத்தார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை காண துபாய் வாழ் தமிழர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் விழா நடைபெறும் இடம் திக்குமுக்காடி போனது. அரங்கின் வெளியே ஆர்ப்பரித்த தமிழர்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பை அளித்தது, அந்நாட்டு அரசியல் பிரதிநிதிகளையே ஆச்சரியம் கொள்ள செய்தது.
அதனைத்தொடர்ந்து 26-ந்தேதி ஐக்கிய அரபு வாழ் தமிழர்கள் சார்பில் துபாயில் ‘நம்மில் ஒருவர், நம்ம முதல்வர்’ எனும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு துபாய், அபுதாபி தாண்டியும் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் ஏராளமானோர் திரண்டது, துபாய் நாட்டையே ஒருகணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திரும்பி பார்க்க வைத்தது.
இதுவரை எத்தனையோ நாடுகளை சேர்ந்த பிரதமர்களும், தலைவர்களும் துபாய்க்கு வந்தபோது கூட இல்லாத வரவேற்பு, ஒரு மாநிலத்தை சேர்ந்த முதல்-அமைச்சருக்கு கிடைத்திருப்பது அனைவரையும் பிரமிக்க செய்துள்ளது. நாட்டின் தலைவர்களுக்கு உண்டான மதிப்பும், மரியாதையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்திருப்பது வியக்க வைத்திருக்கிறது. ‘நம்மில் ஒருவர், நம்ம முதல்வர்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உலகத்தமிழர்கள் அனைவருமே ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஒன்றுகூடியதால் துபாய் ஸ்தம்பித்து போனது என்றே சொல்லலாம். அந்தளவு தமிழர்கள் வெள்ளமென சூழ்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாபெரும் வரவேற்பு அளித்தனர்.
அதேவேளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக ஏராளமான அரேபியர்களும், தொழில் அதிபர்கள், வணிக நிறுவன பிரதிநிதிகள் என அனைவருமே திரண்டதால், அந்த பகுதி முழுவதுமே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
‘ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சருக்கு இப்படி ஒரு வரவேற்பா? யாருப்பா இவரு?’, என்ற கேள்வியை துபாய் அரசு பிரதிநிதிகள் அனைவருக்குமே தமிழர்களின் உற்சாகம் எழ செய்தது. இதனை தனியார் இணையதளங்களும் செய்தியாகவே வெளியிட்டிருக்கின்றன.
‘‘தமிழர்கள், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் லட்சியம். இந்த நாட்டின் குடிமக்களாக நாட்டுப்பற்றுடன் வாழுங்கள். அதே நேரத்தில் நாம் தமிழினத்தை சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடாமல் வாழுங்கள். நீங்கள் வாழும் நாட்டை முன்னேற்றுங்கள். இந்த நாட்டின் வளத்தையும், அறிவையும், தொழில்நுட்பத்தையும் தமிழ்நாட்டுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
கடல் கடந்து வாழ்ந்து வரும் நீங்கள் எல்லாரும் மொழியால் தமிழர்கள், இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’, என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த விழாவில் பேசியது துபாய் வாழ் தமிழர்கள் அனைவரையுமே உற்சாகம் கொள்ள செய்துள்ளது.
எல்லாவற்றையும் விட தமிழகத்தில் வேட்டி, சட்டையில் மிடுக்குடன் வலம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாயில் ‘கோட்-சூட்’ அணிந்து ‘டிப்-டாப்’ ஆக வலம் வந்தது, அங்குள்ள முக்கிய இடங்களை பார்வையிட்டது அனைவரையும் ரசிக்க செய்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் அதிகம் பார்க்கப்படும் காட்சிகளாக அமைந்து வருகின்றன.
எல்லாவற்றையும் விட இந்த அரசு முறை பயணத்தில் ரூ.2,600 கோடி முதலீடு மற்றும் 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையை இன்னொரு தளத்துக்கு எடுத்து சென்றிருப்பதாக துபாய் மற்றும் இந்திய இணையதளங்கள் பாராட்டுகளை தெரிவிக்கின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.