மே 14, 15-ந் தேதிகளில் ‘டான்செட்’ தேர்வு நாளை மறுதினம் முதல் விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் மற்றும் எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் ‘டான்செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி, 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கான தேர்வு வருகிற மே மாதம் 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

எம்.சி.ஏ. படிப்புக்கு 14-ந் தேதி காலையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு 14-ந் தேதி பிற்பகலிலும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு 15-ந் தேதி காலையிலும் தேர்வு நடக்கும். தமிழகத்தில் சென்னை, கோவை, சிதம்பரம், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, காரைக்குடி, சேலம், நாகர்கோவில், திருநெல்வேலி, தஞ்சாவூர், விருதுநகர், விழுப்புரம், வேலூர், திருச்சி ஆகிய 15 இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வை எழுத விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதிக்குள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு வருகிற மே மாதம் 2-ந் தேதி ஹால்டிக்கெட் வெளியிடப்படும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.