புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கிட துறைமுக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பல நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து செயல்பட்டு வந்தது. துறைமுகம் துார்ந்ததால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க அரசு முடிவெடுத்தது. அதனையொட்டி, துார்ந்துபோன முகத்துவாரத்தை துார் வாரி கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ஆழப்படுத்தப்பட்டது. பழைய துறைமுகத்தில் உள்ள குடோன்கள் சீரமைக்கப்பட்டன.
இதையடுத்து சென்னை, காரைக்கால் மற்றும் அந்தமான் ஆகிய நகரங்களுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துறைமுகத்தை லாபத்தில் இயக்கிட, துறைமுகத்தில் காலியாக உள்ள இடங்களில் சினிமா படப்பிடிப்புகள் நடத்தவும், அரங்கம் அமைத்து நாடகம் தயாரிப்பு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி, துறைமுகத்துறை விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க முடிவு செய்து, விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரியது.
இதற்கான காலக்கெடு கடந்த 21ம் தேதி முடிவுற்றது.துறைமுகத்துறையின் அறிவிப்பை ஏற்று, புதுச்சேரியில் இருந்து பயணிகள் மற்றும் சரக்கு கப்பல்களை இயக்கவும், துறைமுகத்தில் அரங்கம் அமைத்து கேளிக்கை நடத்திட தனியார் நிறுவனங்கள் பல ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளன.இந்த விண்ணப்பங்களை துறைமுகத்துறை ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. கப்பல் போக்குவரத்து துவங்குவதன் மூலம் புதுச்சேரியில் சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள் மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.
