ரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் உக்ரைன் அதிபர் பரபரப்பு புகார்!!

கீவ்:“உக்ரைன் மீது, ‘பாஸ்பரஸ்’ ரசாயன குண்டுகளை வீசி, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்,” என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய விரும்பிய, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:உக்ரைன் மீது, ரஷ்ய படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ரசாயன ஆயுதங்களையும் பயன் படுத்த துவங்கிஉள்ளனர். மிகவும் அபாயகரமான பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில், ஏராளமான குழந்தைகளும், இளைஞர்களும் உயிரிழந்து உள்ளனர்.உக்ரைனுக்கு,

உலக மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மக்கள் அனைவரும் பொதுவெளியில் இறங்க வேண்டும்; சாலைகளில் திரண்டு உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கூறுகையில், “உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது; நிலையானது. “அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது. இந்த பிரச்னையுடன் வர்த்தகத்தை இணைத்து பேசக்கூடாது,” என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Leave a Reply

Your email address will not be published.