2020ல் ரசாயன தாக்குதலுக்கு ஆளான ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை!!

மோசடி வழக்கு ஒன்றில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தீவிர எதிர்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான அலெக்சி நவால்னிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கடந்த 2020ம் ஆண்டு ரசாயன தாக்குதலுக்கு இலக்காகி இறக்கும் நிலைக்கு சென்றார். ஜெர்மனி உதவியுடன் அதில் இருந்து மீண்டு வந்த அவரை கடந்த ஜனவரி மாதம் மோசடி வழக்கு ஒன்றில் ரஷ்ய போலீஸ் கைது செய்தது. இந்த வழக்கில் அலெக்சி நவால்னிக்கு 2.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் மாஸ்கோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையை தனிப்பட்ட செலவுக்கு பயன்படுத்தியதாகவும் மற்றொரு வழக்கில் நீதிமன்றம் செலுத்த அபராதத்தை செலுத்த மறுத்ததாகவும் குற்றம் சாட்டி புதிய வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த வந்த மாஸ்கோ நீதிமன்றம், அலெக்சி நவால்னி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்தது. இதையடுத்து இந்த 2 வழக்குகளிலும் அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அலெக்சி நவால்னிக்கு மக்கள் இடையே பெரும் ஆதரவை பொறுத்து கொள்ள முடியாமல் அதிபர் புதின் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.