பெங்களூரு அணியை பிளிஸ்சிஸ் சிறப்பாக வழிநடத்துவார்”: விராட் கோலி பேட்டி!
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையில் களம் இறங்குகிறது. கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஐ.பி.எல். ஏலத்தில் அனுபவ வீரர் பிளிஸ்சிஸ்சை எடுப்பது என்ற திட்டத்தில் தெளிவாக இருந்தோம். வீரர்கள் ஓய்வறையில் நாங்கள் மிகவும் மரியாதை அளிக்கும் ஒரு தலைவர் தேவை. அதாவது கட்டளை போடும் வீரர் கேப்டனாக வேண்டுமே தவிர, கோரிக்கைகள் வைக்கும் தலைவர் அல்ல. அவர் தென்ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்துள்ளார். நிறைய சாதித்துள்ளார். அவர் பெங்களூரு அணியை வழிநடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நிச்சயம் இந்த பணியை மிகச்சிறப்பாக செய்வார். நான் உள்பட அனைவரும் அவருடன் நன்றாக பழகுகிறோம்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கி இவ்வளவு தூரம் வந்திருப்பது நம்ப முடியாத ஒன்று. நான் தற்போது புத்துணர்ச்சியுடன் இங்கு திரும்பி இருக்கிறேன். ஏனெனில் பொறுப்பு மற்றும் கடமைகளில் இருந்து விலகி உள்ளேன்.
என்னுடைய வாழ்க்கையை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு என்று ஒரு குடும்பம் வந்து விட்டது. மகளுடன் அதிக நேரத்தை செலவிடுகிறேன். என்னை பொறுத்தவரை அளவற்ற மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும். அதே சமயம் எனக்கு பிடித்த கிரிக்கெட்டையும் விளையாடுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் துல்லியமாக இருக்கிறேன். களத்தில் எப்போதும் போல் ரசித்து அனுபவித்து விளையாடி அணிக்கு முழு பங்களிப்பை அளிப்பேன்.
இவ்வாறு கோலி கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.