அப்படியே நிற்கின்றன பழைய அடுக்குமாடி வீடுகள்!!!

கோவை: சிங்காநல்லுாரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு, வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. அடுத்த கட்டப்பணிகள் எதுவும் நடக்கவில்லை என, வருத்தப்படுகின்றனர் குடியிருப்புவாசிகள்.

கோவை சிங்காநல்லுார் உழவர் சந்தைக்கு அருகில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இங்கு, குறைந்த வருவாய் பிரிவு, நடுத்தர வருவாய் பிரிவு மற்றும் உயர் வருவாய் பிரிவு என, மூன்று வகையாக, 960 வீடுகள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய குடியிருப்பு என்பதால், பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது.இந்த குடியிருப்பை இடித்து விட்டு, புதிய குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். கோரிக்கையை ஏற்று, தனியார் கட்டுமானத்துறையினர் பங்களிப்புடன் புதிய அடிக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க, அரசு முன் வந்தது.

இதற்காக அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, குடியிருப்போரின் ஒப்புதல் பெறப்பட்டது. நான்கு மாதங்களுக்கு முன் இதுகுறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று, ”இங்கு, 1,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும். இவ்வளவு தொகையை வீட்டு வசதி வாரியத்துறையால் செலவிட முடியாது. அதனால், தனியார் கட்டுமானத்துறையினர் நிதி பங்களிப்புடன் புதிய குடியிருப்பு கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்,” என அறிவித்தார்.

அத்தோடு சரி. அமைச்சரின் இந்த அறிவிப்பு, அறிவிப்பாக மட்டுமே உள்ளது. நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும், எந்த பணியும் நடக்கவில்லை.குடியிருப்பு கட்டிக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், இங்கு வசித்து வந்த பலர் வீட்டைக்காலி செய்து விட்டு, வேறு இடங்களில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். பலர் வேறு வழியில்லாமல் இடிபாடுள்ள வீடுகளிலேயே வசித்து வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.