கருங்கடலில் ரஷ்ய போர்க் கப்பல்களில் இருந்து கீவ், லிவிவ் மீது ஏவுகணை தாக்குதல்!
லிவிவ்: ரஷ்யா மீண்டும் மீண்டும் போர் குற்றங்களில் ஈடுபடுவதாக உலக தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள தனது போர் கப்பல்கள் மூலமாக உக்ரைன் தலைநகர் கீவ், லிவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடம், போர் விமானங்கள் பழுது பார்க்கும் ஆலை தகர்க்கப்பட்டன.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் பதுங்கியுள்ள இடங்கள், அரசு மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து குண்டுவீசி தாக்குதல் நடத்துகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் பலர் இப்போரில் கொல்லப்பட்டு வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடின் மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஐநா.வில் வலியுறுத்தி வருகின்றன. போரை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டும், போரை நிறுத்தாத ரஷ்யா 23வது நாளாக நேற்று தனது தாக்குதலை தொடர்ந்தது.
நேற்று முன்தினம் உயர்மட்ட கூட்டம் ஒன்றில் பேசிய அதிபர் புடின், உக்ரைன் போரை எதிர்த்து உள்நாட்டில் போராடுபவர்களைப் பற்றி குறிப்பிடுகையில், ‘ரஷ்ய மக்கள் எப்போதுமே உண்மையான தேச பக்தர்களையும், துரோகிகளையும் வேறுப்படுத்தி பார்க்கத் தெரிந்தவர்கள். இந்த துரோகிகள் கொசுக்களைப் போன்றவர்கள். தவறுதலாக வாயில் புகுந்த இந்த கொசுக்களை ரஷ்ய மக்கள், போகிற போக்கில் ரோட்டில் துப்பி நசுக்கிவிடுவார்கள்,’ என்றார். அரசுக்கு எதிராக போராடுபவர்களை மிரட்டும் தொனியில் அதிபர் புடின் பேசியிருப்பது, ரஷ்ய சமூக ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கச்சா எண்ணெய் வாங்குவதை அரசியலாக்கக் கூடாது: இந்தியா உக்ரைன் போரால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தடை விதித்துள்ளன. இதனால், தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் தர ரஷ்யா முன்வந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல்கட்டமாக இந்தியாவின் ஐஓசி சார்பில் 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடமிருந்து வாங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இது ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கு எதிரான செயல்பாடாக ஆகாது என அமெரிக்கா கூறினாலும், ஒருவகையில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரிக்கும் செயல் என மறைமுகமாக குற்றம்சாட்டியது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இவ்விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அளித்த பேட்டியில், ‘‘இந்தியா தனது எண்ணெய் தேவையில் பெரும்பாலும் இறக்குமதியை நம்பி உள்ளது. தற்போதைய சூழலில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், உலக சந்தையில் உள்ள அனைத்து விலை குறைவான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய வேண்டிய சூழலில் உள்ளோம். ரஷ்யா ஒருபோதும் இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் வழங்குநராக இல்லை. எனவே, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது,’’ என்றார்.
அமைதிக்கான நோபல் பரிசு ஜெலன்ஸ்கி பெயர் பரிந்துரை: ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ‘உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு 2022ம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வழங்க வேண்டும். இதற்காக, இந்த பரிசை வழங்குவதற்கான நடைமுறைகளி்ல் மாற்றம் செய்ய வேண்டும். மேலும், அவருடைய பெயரை பரிந்துரை செய்வதற்காக, நோபல் அமைதி பரிசுக்கான விண்ணப்ப தேதியையும் மார்ச் 31 வரை நீட்டிக்க வேண்டும்,’ என்று நார்வே நோபல் பரிசு கமிட்டியை வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக நோபல் பரிசு கமிட்டிக்கு கடந்த 11ம் தேதி கடிதம் எழுதியுள்ளனர். இந்த பரிசுக்கு பெயர்களை பரிந்துரை செய்வதற்கான கடைசி தேதி ஏற்கனவே முடிந்து விட்டது. 151 தனி நபர்கள், 92 அமைப்புகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 3-10ம் தேதிக்குள் பரிசு யாருக்கு என்பது அறிவிக்கப்பட உள்ளது.
நீண்ட நாட்களுக்கு போர் நீடித்தால் ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்தும்: உக்ரைன் போர் நிலவரம் பற்றி அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறை, 67 பக்க அறிக்கையை பென்டகனில் சமர்ப்பித்துள்ளது. அதில், ‘உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய படைகள் நீண்ட காலத்துக்கு ஆக்கிரமித்து இருந்தால் அதன் படைகள் சோர்வடையும். போரினால் அதன் நவீன ஆயுதங்கள் காலியாகி வருகின்றன. பொருளாதார தடைகள் காரணமாக இந்த ஆயுதங்களை அந்த நாட்டினால் உடனடியாக தயாரிக்க முடியாது. மேலும், உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள், உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவது போன்றவை ரஷ்யாவுக்கு நீண்ட கால பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். இது அந்த நாட்டுக்கு விரக்தியை ஏற்படுத்தும். எனவே, உக்ரைன் படைகளின் கடும் எதிர்ப்பால் நீண்ட நாட்களுக்கு போர் நீடித்தால், அதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடும்,’ என கூறப்பட்டுள்ளது.
கீவ் குண்டுவீச்சில் பிரபல நடிகை பலி: உக்ரைனை சேர்ந்த பிரபல நடிகை ஒக்சனா ஷிவெட்ஸ். 67 வயதான இவர், சிறந்த நடிப்புக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். தலைநகர் கீவ்வில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த இவர், ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சில் பலியாகி விட்டார். இவர் எப்போது கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியாகவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.