சொந்த கட்சி எம்பி.க்களும் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு: 24 பேர் கட்சி தாவி வாக்களிக்க முடிவு!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்து வரும் கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் முட்டாஹிதியா குவாமி இயக்கம், பலுசிஸ்தான் அவாமி கட்சி, மெகா ஜனநாயக கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்நாட்டில் பொருளாதார பாதிப்புகள் நீடித்து வருவதால் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்குவதற்காக, எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இதன் மீதான விவாதம் வரும் 21ம் தேதி தொடங்கும் என்றும், மார்ச் 28ம் தேதி வாக்கெடுப்பு நடக்கும் என்றும் தெரிகிறது.

இந்நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆளும் கூட்டணியை சேர்ந்த கட்சிகள், இம்ரானை கானை பிளாக்மெயில் செய்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றன. முக்கிய கூட்டணி கட்சியான பிஎம்எல்-க்யூ, தங்கள் கட்சியை சேர்ந்த சவுத்ரி பர்வேஸ் இலாஹியை பஞ்சாப் மாகாண முதல்வராக்கும்படி மிரட்டி வருகிறது. நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடுவதற்குள் இதற்கான முடிவை அறிவிக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளின் மிரட்டலால் சிக்கலில் உள்ள இம்ரானுக்கு எதிராக, அவருடைய சொந்த கட்சியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட எம்பி.க்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவர் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டார், தங்கள் தொகுதி பிரச்னைகளை தீர்க்கவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களை கூறி, அவருக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், தாங்கள் கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், சிந்து மாகாண முதல்வரிடம் இவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு வலுத்து வருவதாலும், ராணுவம் நடுநிலைமை வகிப்பதாக கூறி உள்ளதாலும், இம்ரான் கானின் ஆட்சி தப்புமா என்பது கேள்வி குறியாகி உள்ளது. இது, பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.

ஆட்சி தப்பாது?: மொத்தம் 342 உறுப்பினர்கள் உள்ள நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற 172 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இம்ரான் கானுக்கு சொந்த கட்சியில் உள்ள 155, பிஎம்எல்.க்யூ உள்ளிட்ட 6 கூட்டணி கட்சியில் உள்ள 23 உறுப்பினர்கள் என 178 பேரின் ஆதரவு தற்போது உள்ளது. ஆனால், சொந்த கட்சி எம்பி.க்கள் 25, பிஎம்எல்.க்யூ. எம்பிக்கள் 5 என 30 உறுப்பினர்கள் ஆதரவளிக்காத பட்சத்தில், இந்த எண்ணிக்கை 148 ஆக குறையும். இது நடந்தால் இம்ரான் கானின் ஆட்சி கவிழும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.