உக்ரைனில் கொல்லப்பட்டகர்நாடக மாணவர் சடலம் நாளை மறுதினம் வருகை!!
புதுடெல்லி: உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவரின் சடலம், நாளை மறுதினம் (வரும் 21ம் தேதி) இந்தியா கொண்டு வரப்படுகிறது. கர்நாடகாவை சேர்ந்தவர் நவீன் சேகரப்பா (23). உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் செயல்படும் மருத்துவ கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 1ம் தேதி சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க சென்றபோது, ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானார். இவருடைய சடலம் அங்கேயே பதப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இவருடைய சடலத்தை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்துள்ளது. அதன்படி, அவருடைய சடலம் நாளை மறுதினம் பெங்களூரு விமான நிலையத்துக்கு விமானத்தில் கொண்டு வரப்படுகிறது. பின்னர், முறைப்படி இறுதிச்சடங்கு செய்வதற்காக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.