கொரோனா பரிசோதனைகளை குறைப்பதா? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஜெனீவா : ‘சில நாடுகளில் கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே உலக நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகம் முழுதும் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதுமாக இருக்கிறது.இந்நிலையில் கடந்த 7ம் தேதி முதல் 13 வரையிலான ஒரு வார காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 1.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரத்தை விட 8 சதவீதம் அதிகமாகும். இதேபோல் கடந்த வாரம் 43 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவானது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு மாத காலமாக குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு சில நாடுகளில் மீண்டும் அதிகரித்து வருகிறது. இது பாதிப்பு குறைவாக இருக்கும் நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஒமைக்ரான் வகை வைரஸ் மற்றும் அதன் பி.ஏ. 2 ரக வைரஸ் காரணமாகவே கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் இருப்பது இன்னொரு காரணம்.குறிப்பாக மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள தென் கொரியா சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது; பலி எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆப்ரிக்காவில் 12 சதவீத அதிக பாதிப்புகளும் 14 சதவீத அதிக உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன. மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் 38 சதவீத அதிக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.சில நாடுகளில் கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே உலக நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும். பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடாமுயற்சியில் தென் கொரியாகிழக்காசிய நாடான தென் கொரியாவில், கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும், ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இவ்வளவு அதிகமானோர் வேறு எந்த நாட்டிலும் பாதிக்கப்படவில்லை. அதே நேரத்தில், இங்கு பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது.

கொரோனா பரிசோதனைகளை துரிதப்படுத்தி, பாதிக்கப்பட்டோரை விரைவாக கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளிலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளிலும் தென் கொரிய அரசு கவனம் செலுத்தி வருவதால், உயிரிழப்பு குறைவாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.