குடியரசு தலைவர் தேர்தலில் தங்களின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் வெற்றி பெற முடியாது-மம்தா!!

இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் தங்களின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய அவர், தங்களின் கட்சியின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் கப்பலை ஓட்ட முடியாது என்று கூறியுள்ளார். 5 மாநில தேர்தலில் கோவா, மணிப்பூர், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 255 இடங்களில் மட்டுமே அந்த கட்சியால் வெல்ல முடிந்தது.

இந்த நிலையில் தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை 25ம் தேதியுடன்  நிறைவடைகிறது. ஜூன் அல்லது ஜூலையில் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. தேர்தலில் எம்பிக்களும் எம்எல்ஏக்களும் மட்டுமே வாக்களிப்பர். 213 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தங்களுக்கு உகந்தவரை மட்டுமே குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக நிறுத்தும் என்பது உறுதி. ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக திரிணாமுல் இருக்கும் என்று கூறும் வகையில், ஆட்டம் இன்னும் முடியவில்லை என்று மம்தா கூறியிருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.