காணொலியில் தொடர்ந்த 4ம் கட்ட பேச்சுவார்த்தை!!
* கீவ் நகரில் ஊரடங்கு
தலைநகர் கீவ்வில் ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருவதை தொடர்ந்து, இந்த நகரில் அடுத்த 36 மணி நேரத்திற்கு கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேயர் விடாலி கிளிட்ச்கோ விடுத்துள்ள அறிக்கையில், ‘இது கடுமையான, ஆபத்தான தருணம். எனவே, மக்்கள் 2 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். சைரன் எச்சரிக்கை இல்லாவிட்டாலும், பதுங்கு குழிகளிலேயே இருங்கள். செவ்வாய் இரவு 8 மணி முதல் வியாழன் இரவு 7 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இது ராணுவத்தின் உத்தரவு’ என கூறி உள்ளார்.
* ரஷ்ய தொலைக்காட்சியில் போருக்கு எதிராக பதாகை
ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதுவரை போராட்டக்காரர்கள் 15,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு 8 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் சட்டங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, உக்ரைன் போர் செய்திகளை வெளியிட்டால் 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தையும் அந்நாட்டு அதிபர் புடின் கொண்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில், ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியான சேனல்-1ன் நேரடி ஒளிபரப்பில் பெண் செய்தி ஆசிரியர் மரினா ஓவ்சியானிகோவா என்பவர் ‘போர் வேண்டாம்’ என உக்ரைனை போரை கைவிடக் கோரிய பதாகைகளை ஏந்தினார். செய்தி வாசிக்கும் பெண்ணுக்கு பின்புறம் பதாகையை காட்டிய அவரின் தைரியத்தை பலரும் பாராட்டுகின்றனர். ஆனால், இதற்காக மிகவும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். தற்போது அவர் மாயமாகி உள்ளார். மரினா எங்கிருக்கிறார் என அவரது வக்கீலுக்கும் கூட தெரியவில்லை.
* காணொலியில் தொடர்ந்த 4ம் கட்ட பேச்சுவார்த்தை
ரஷ்யா, உக்ரைன் இடையேயான 4ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்தது. இதில் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையை ரஷ்யா ஏற்கவில்லை. ஆனாலும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்றும் 4ம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.