முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் இன்று விசாரணை!
கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அஜய் ஜோஸ் உள்ளிட்ட 6 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ‘ரிட்’ மனுவில், ‘பெரியாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டவும், வைகை அணையின் கொள்ளளவை அதிகரிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
தற்போது உள்ள முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்த மத்திய அரசு, தமிழக மற்றும் கேரள அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளனர். இந்த ரிட் மனு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் மேத்யூ நெடும்பறா ஆஜரானார். மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘இந்த ரிட் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள, முல்லைப்பெரியாறு பாதுகாப்பு தொடர்புடைய மனுக்களுடன் இணைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இடுக்கி தொகுதி எம்.பி. டீன் குரியகோஸ், ‘முல்லைப்பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை ஆய்வு செய்ய சுதந்திரமான விஞ்ஞானிகளை கொண்டு குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.