உள்நாட்டு விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டுகிறது ஜோதிராதித்ய சிந்தியா தகவல்!
மாநிலங்களவையில் நேற்று உள்நாட்டு விமான போக்குவரத்து தொடர்பான உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார். அப்போது அவர் உள்நாட்டு விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டுவதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘கொரோனாவுக்கு முன், இந்தியாவில் ஒரு நாளைக்கு அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை சுமார் 4 லட்சம் ஆகும். இந்த எண்ணிக்கையை நாம் படிப்படியாக எட்டி வருகிறோம். அந்தவகையில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு 3.83 லட்சத்தை பயணிகள் என்ற நிலையை எட்டியுள்ளோம் என்பதை இந்த அவையில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என தெரிவித்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வருகிற 27-ந்தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவதால், அனைத்து விமான நிறுவனங்களின் கோடை கால அட்டவணைப்படி இந்தியாவுக்குள்ளும், வெளியேயும் செல்வதற்கு போதுமான இருக்கைகள் கிடைக்கும் எனவும், கட்டண நிர்ணயம் கணக்கில் கொள்ளப்படும் என நம்புவதாகவும் சிந்தியா கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.