2 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவில் ஒரே நாளில் 2,000 பேருக்கு தொற்று!

பீஜிங்: சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஒரே நாளில் 2,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தென் கொரியாவிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தை எட்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா வைரசால், உலக நாடுகளில் இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 45 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 171 பேராக உள்ளது. அதேபோல், 60 லட்சத்து 40 ஆயிரத்து 722 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், உலக முழுவதும் வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த ஜனவரியில் 3ம் அலை ஏற்பட்டது. மற்ற பல நாடுகளில் 4, 5 அலைகள் ஏற்பட்டு விட்டன. தற்போது, உலகின் பெரும்பாலான நாடுகளில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்நிலையில், சீனாவிலும் தென் கொரியாவிலும் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் நகரில் 2 நாட்களுக்கு முன் ஒரேநாளில் 397 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், 90 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில் 2,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 131 பேர் வெளிநாட்டினர். ஜிலின் மாகாணத்தில் மட்டுமே 1,412 பேருக்கும், ஷான்டாங் மாகாணத்தில் 175 பேருக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால், சாங்சுன் நகரை தொடர்ந்து, 5 லட்சம் பேர் வசிக்கும் யுசெங் நகரிலும் நேற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தென்கொரியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 50 ஆயிரத்து 176 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன்மூலம், இந்த நாட்டில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்து 56 ஆயிரத்து 453 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நேற்று புதிதாக  251 பேர் பலியாகினர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 395 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு, பலி எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதால், இந்த 2 நாடுகளிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக பீதி ஏற்பட்டுள்ளது.

* இந்தியாவில் தொடர்ந்து சரிவு
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
* கடந்த 676 நாட்களுக்கு பிறகு நேற்று மிகவும் குறைவாக 3,116 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது.
* நேற்று புதிதாக 47 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,15,850 ஆக உயர்ந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 0.09 சதவீதமாக குறைந்துள்ளது.
* நாட்டில் இதுவரை, 180.13 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.