லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட தகவலுக்கு ஒன்றிய அரசு மறுப்பு!!
சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 4,29,84,261 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,15,714 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 42,219 ஆக குறைந்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் அரசு அறிவித்ததை காட்டிலும் 8 மடங்கு அதிகம் என்று உலக புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட தகவலை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகளிலும் இந்தியாவில் கொரோனாவுக்கு சுமார் 41 லட்சம் பேர் பலியானார்கள் என்கிறது லான்செட் மருத்துவ இதழ். இதனை திட்டவட்டமாக மறுக்கும் ஒன்றிய சுகாதார அமைச்சகம், இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் முறையாக பதிவு செய்யப்படுவதாக கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுவதாக கூறியுள்ள சுகாதார அமைச்சகம், சர்வதேச பத்திரிகையில் வெளியான தகவல் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது, பொய்யானது, மக்களை திசை திருப்பும் முயற்சி என்று சாடியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.