உக்ரைனின் முக்கிய நகரங்களில் இன்று ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் : ரஷியா அறிவிப்பு!!
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அப்பாவி பொது மக்களும் மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வெளியேற வசதியாக இன்று ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் செய்வதாக ரஷியா அறிவித்துள்ளது. நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷிய உக்கிர தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கீவ், மரியுபோல், சுமி ஆகிய நகரங்களில் ரஷியா குண்டுமழை பொழிந்து வருகிறது. இதில் உக்ரைன் ராணுவ வீரர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ரஷியாவின் தாக்குதல்கள் எதிரொலியாக முக்கிய நகரங்களில் சிக்கி இருக்கும் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக சுமி நகரில் மட்டும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் உணவு, குடிநீர் இல்லாமல் போர்களத்தில் தவித்து வருகின்றனர். அவர்கள் சுமி நகரில் இருந்து வெளியேற தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரைன் மற்றும் ரஷிய நாடுகளை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் தலைநகர் கீவ், கார்க்கிவ், மரியுபோல், சுமி ஆகிய நகரங்களில் இன்று ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் செய்வதாக ரஷியா அறிவித்துள்ளது. ரஷியாவின் போர் நிறுத்த அறிவிப்பை அடுத்து உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரையும் எல்லை நாடுகள் வழியாக மீட்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.