பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு தலை வணங்குகிறேன்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து!!
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பெண்களை போற்றி, தங்கள் வாழ்த்தினை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘மகளிர் தினத்தில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு தலை வணங்குகிறேன். பெண்களின் கண்ணியம் மற்றும் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் முன்னேற்றத்தில் இந்திய அரசு கவனம் செலுத்தும், ‘ என்றார்.
முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாதம் மாறட்டும்! அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே! புத்துலக ஆக்கத்தில் முன் நிற்கும் பெண்களுக்குக் கழக அரசு துணைநிற்கும்! ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி, நாள்தோறும் தடைகளைத் தகர்த்து, அன்றாடம் சரித்திரம் படைக்கும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள். ஆண் பெண் இருவரும் சமமாக மதிக்கப்படும் ஒரு சமூகத்தை உருவாக்கவும், பாகுபாடுகளற்ற ஒரு நிலையைக் காணவும், நாம் கடந்து வந்திருக்கக் கூடிய பாதை என்ன, நாம் செல்ல வேண்டிய தூரம் என்ன என்பதை பற்றி சிந்திக்கவும், இந்த நாளை நாம் பயன்படுத்துவோம். என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.