கொரோனாவால் உலகம் முழுதும் 60 லட்சம் பேர் பலி!!!

கொரோனா பரவல் இரண்டாண்டுகளை கடந்து, மூன்றாவது ஆண்டிற்கு வந்துள்ள நிலையில், இந்த பெருந்தொற்றுக்கு உலகம் முழுதும், 60 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.உலகின் பல்வேறு நாடுகளிலும், கொரோனா பரவல் படிப்படியாக குறைய துவங்கி உள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

அதே நேரத்தில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், கொரோனா பலி அதிகரிக்க துவங்கி உள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் உள்ள 75 லட்சம் மக்களுக்கும், இந்த மாதம் மட்டும் மூன்று முறை தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளிலும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் இன்னும் குறையவில்லை. ரஷ்யா போர் தொடுத்திருக்கும் உக்ரைனிலும், தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடக்காததால், தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன.

நவீன மருத்துவ வசதிகள் உடைய அமெரிக்காவில், பலி 10 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது. ”தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டாத நாடுகளில், தொற்று பரவலும், உயிரிழப்புகளும் இன்னும் குறையவில்லை,” என, சிங்கப்பூர் தேசிய மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் டிக்கி பாங் கூறியுள்ளார்.இதற்கிடையே, கொரோனா பரவல் இரண்டாண்டுகளை கடந்து, மூன்றாவது ஆண்டிற்கு வந்துள்ள நிலையில், ‘உலகம் முழுதும், கொரோனாவால் 60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்’ என, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலையின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.’ஆனால், முறையாக பதிவு செய்யப்படாத உயிரிழப்புகளையும் சேர்த்தால், கொரோனா பலி 1.40 கோடியில் இருந்து 2.35 கோடியை தாண்டும்’ என கூறப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.