அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ரகசிய தொலைதொடர்பு வசதியை நிறுவி உள்ளது!!!

அமெரிக்கா ரகசிய தொடர்பு
உக்ரைன் போர் தொடர்பாக எதிர்பாராத மோதலைத் தவிர்க்க ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ரகசிய தொலைதொடர்பு வசதியை நிறுவி உள்ளது. போர் சம்பவங்கள், மோதல், தவறான மதிப்பீடுகளை தவிர்ப்பதற்காக இந்த வசதி கடந்த 1ம் தேதி ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பென்டகன் அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை.

உலக தலைவர்கள் அவசர அழைப்பு
ஜாபோரிஜியா அணு மின் நிலைய தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ட்ரூடோ உள்ளிட்ட உலக தலைவர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை போனில் தொடர்பு கொண்டு, நிலைமையை கேட்டறிந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க உடனடியாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட வேண்டுமென இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது.

சடலம் வைக்கும் இடத்தில் 12 பேரை அழைத்து வரலாம்: பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
உக்ரைன் போரில் பலியான கர்நாடகாவைச் சேர்ந்த மாணவன் நவீனின் உடல் எப்போது இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து, கர்நாடகா பாஜ எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் அளித்த பேட்டியில், ‘‘உக்ரைனில் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது என்பதை டிவி சேனல் மூலம் பார்த்திருப்பீர்கள். இப்படிப்பட்ட அசாதாரண நிலையில் இறந்த மாணவனின் உடலை கொண்டு வருவது சிக்கலான விஷயம். ஏனெனில், விமானத்தில் சடலத்தை வைக்கும் இடத்தில், உயிரோடு உள்ள 10-12 பேரை அழைத்து வந்துவிடலாம். எனவே, வழக்கமான விமான சேவை தொடங்கிய பிறகு, மாணவனின் சடலம் கொண்டு வரப்படலாம்.’’ என்றார். இந்த பேச்சு கடும் சர்ச்சையாகி உள்ளது. கொடூரமான இந்த பேச்சு, பாஜவின் மரபணுவை காட்டுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கண்டனம் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.