உக்ரைன் அணுமின்நிலைய தாக்குதலை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜோ பைடன்
உக்ரைனில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஷியா அணுமின்நிலையம் மீது ரஷிய படைகள் இன்று அதிகாலையில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா தெரிவித்தார்.
மிகப்பெரிய அணு உலை வெடித்தால், அது செர்னோபில் அணு உலை பாதிப்பை விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், உக்ரைன் அணுமின் நிலையத்தில் ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டுமென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். மேலும், அந்த பகுதியில் தீயணைப்பு வீரர்களையும், அவசரகால சேவைகளையும் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தகவல்களின்படி, “கதிரியக்க அளவுகள் அதிகரித்திருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.