டிஎன்பிஎஸ்சி.யில் இடஒதுக்கீடு வழக்கு போட்ட மாணவருக்கு குரூப்-1 தேர்வு எழுத அனுமதி:உச்ச நீதிமன்றம் உத்தரவு
மிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்தாண்டு வெளியிட்டது. அதன்படி, பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்கள், தனித் தேர்வர்கள் ஆகியோருக்கு இது பொருந்தாது.
இந்நிலையில், ஸ்ரீராம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ‘தமிழ், ஆங்கிலம் என 2 வழிகளிலும் பயின்றுள்ளேன். தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 எழுத்து தேர்வு மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பித்து உள்ளேன். தமிழக அரசு அரசாணை வெளியிடும் முன்பாகவே நான் விண்ணப்பித்து விட்டதால், எனக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்,’ என தெரிவித்தார்.
நீதிபதி கே.எம்.ஜோசப் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அடிப்படையாகக் கொண்டுதான் திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டது. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘குரூப்-1 எழுத்து தேர்வு நாளை (இன்று) தமிழகத்தில் நடைபெற உள்ளதால் மனுதாரரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இது, இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. அதுவரை அவரது தேர்வு முடிவை வெளியிடக் கூடாது,’ என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.