துறைமுக நகரங்களை கைப்பற்றுகிறது ரஷ்யா: கார்கிவ்வில் தொடர்ந்து சண்டை
உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் திட்டத்தோடு ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள், வெடிகுண்டுகளை வீசி நடத்தி வரும் கடுமையான தாக்குதலில் கெர்சான் நகரை கைப்பற்றி உள்ளது. இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் நகரை பிடிக்க ரஷ்ய படைகள் உக்ரைன் படைகளுடன் கடும் சண்டையிட்டு வருகிறது. 8வது நாளான நேற்றும் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்தின. கார்கிவ் நகரில் இயல்பு நிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தெருக்களில் ரஷ்ய, உக்ரைன் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உள்ளது.
தலைநகர் கீவ் மீதும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. காலையில் இருந்தே கீவ் நகரில் வெடிகுண்டுச் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. சில நாட்களுக்கு முன் கீவ் நகரில் இருந்து 65 கிமீ தொலைவில் இருந்த ரஷ்ய படைகள் தற்போது கீவ் நகரில் இருந்து 25 கிமீ தொலைவில் நிலை கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தரைவழி, வான் மார்க்கமாக தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள் கடற்படையின் உதவியுடனும் தாக்குதலை தொடுத்து வருகின்றன. இதில் கருங்கடலில் உள்ள ஒரு துறைமுக நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்துள்ளதாக உக்ரைன் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னொரு துறைமுக நகரான மரியுபோல் நகரை பிடிப்பதற்காக ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலை தொடங்கி உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.