போர் பதற்றத்தால் உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க பேருந்துகள் ஏற்பாடு!!!
ரஷ்ய தாக்குதலால் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரம் இந்தியர்களை மீட்க 130 பேருந்துகளை ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. போர் ஓரிரு நாளில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது உக்ரைன் மீது 9வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை அழைத்து வர ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசி மூலம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொடர்பு கொண்டு உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பத்திரமாக தாயகம் அழைத்துவர உடனடி ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி நகரங்களிலிருந்து 130 பேருந்துகள் மூலம் மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்புடன் ரஷ்யாவின் பெல்கோரோட் நகருக்கு அழைத்து வந்து, அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளது. இந்தியர்களை ரஷ்ய நகருக்கு அழைத்து வரும் வழியில் ஆங்காங்கே தற்காலிக தங்குமிடங்கள், உணவு, குடிநீர், தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் பெல்கோரோட் நகரிலிருந்து விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், ரஷ்ய ராணுவ விமானங்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் ரஷ்யாவின் உயர் ராணுவ ஜெனரல் மிகைல் மிஜின்ட்சே தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா மோதல் தீவிரம் அடைந்து வருவதால் உயிரை காப்பாற்றிக்கொள்ள உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் பெற்று வருகின்றனர். தலைநகர் கீவ் நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் ஏறி ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.