சபரிமலையில் 9 முதல் பங்குனி உத்திர திருவிழா…

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா வரும் 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சபரிமலையில்  பங்குனி உத்திர திருவிழா வருடம்தோறும் மிகவும் விமரிசையாக நடைபெறுவது  வழக்கம். அதன்படி, இந்த வருடத்துக்கான திருவிழா வரும் 9ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி 8ம் தேதி மாலை சபரிமலை கோயில்  நடை திறக்கப்படுகிறது.

இந்த வருடம் திருவிழாவையொட்டி மாசி மாத  பூஜையும் சேர்ந்து வருகிறது. ஆகவே, 8ம் தேதி நடை திறந்தால் 19ம் தேதி வரை 11  நாட்கள் கோயில் நடை திறந்திருக்கும். 8ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை  திறக்கப்படும். மறுநாள் (9ம்தேதி) காலை 10.30க்கும், 11.30 மணிக்கும்  இடையே தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் திருவிழா கொடி  ஏற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அன்று முதல் 10 நாட்கள் திருவிழா  சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 9ம்நாளான 17ம் தேதி இரவில் சரங்குத்தியில்  பள்ளிவேட்டையும், மறுநாள் பம்பையில் பிரசித்தி பெற்ற ஆறாட்டும் நடைபெறும்.  18ம்தேதி மாலையில் கொடி இறக்கப்பட்டு பங்குனி உத்திர திருவிழா  நிறைவடையும்.

இதற்கிடையே மாசி மாத பூஜைகள் 14ம் தேதி முதல் 19ம்  தேதி வரை நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும்.  பங்குனி உத்திர திருவிழா, மாசி மாத பூஜைகளுக்காக 9ம் தேதி காலை முதல்  பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.இவை இரண்டும்  சேர்ந்து வருவதால் இந்த மாதம் சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து 11 நாட்கள்  தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே  தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.