ரஷிய விமான நிறுவனங்களுக்கான ஆதரவு நிறுத்தம்..! போயிங் அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. 

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைன் மீதான இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் ரஷியா மீது கடுமையான தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் இன்று உரையாற்றும் போது அமெரிக்க வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு ரஷிய விமானங்களுக்கு தடை விதிக்கப்பார் என்று தகவல் வெளியானதை அடுத்து அமெரிக்க விமான நிறுவனமான போயிங் ரஷிய விமான நிறுவனங்களுக்கான தனது ஆதரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து போயிங் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ரஷிய விமான நிறுவனங்களுக்கான பாகங்கள், பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு சேவைகளையும் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம். மோதல் தொடர்வதால், ரஷியாவில் உள்ள எங்கள் அணி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எங்கள் குழுக்கள் கவனம் செலுத்துகின்றன. மேலும் உக்ரைன் தலைநகர் கியேவில் உள்ள எங்கள் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.