கரிநாள் கணக்கிடும் முறை.
கரிநாள் கணக்கிடும் முறையும்…! செய்யக்கூடாத செயல்களும்.. .!
? சந்திரனை வைத்து சந்திராஷ்டமம் எப்படி கணிக்கப்படுகிறதோ அதே போல சூரியனை அடிப்படையாக வைத்து கரிநாள் கணிக்கப்படுகிறது.
? சந்திராஷ்டம நாளில் நல்ல காரியங்கள் செய்வதில்லை, முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை. அதே போல் கரிநாளில் சுபகாரியங்கள் செய்வதில்லை.
? மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுள் பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூரட்டாதி போன்ற சில நட்சத்திரங்களும், 15 திதிகளுக்குள் அஷ்டமி, நவமி போன்ற சில திதிகளும், 7 கிழமைகளுக்குள் செவ்வாய், சனி போன்ற சில கிழமைகளும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும், நீண்ட தூர பிரயாணம் போன்றவற்றுக்கும் விலக்கப்பட வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
? அதைப்போலவே, ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சில நாட்களில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதையே கரிநாள் என்று கூறுகிறார்கள்.
? கரிநாள் என்பது திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. கரிநாள் என்பது ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே.
? கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள்படும். அன்றைய தேதியில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.
சுபகாரியங்களை தவிர்ப்பது ஏன்?
? சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், டென்ஷன் ஆதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்பு உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதை தவிர்த்திருக்கிறார்கள்.
? தமிழ்நாட்டில் சௌரமான மாதங்கள் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகின்றன. சௌரம் என்றால் சூரியன் என்று பொருள். அதாவது, சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் மாதங்கள் சௌரமான மாதங்களாகும்.
பஞ்சாங்கத்தில் கரிநாட்கள் :
? ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கரிநாள் வரும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் இந்த இந்த தேதிகள் கரிநாட்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்த தமிழ் தேதிகள் மாறாதது. எந்த ஒரு தமிழ் ஆண்டுக்கும் இது பொருந்தும். எடுத்துக்காட்டாக, தை மாதம் 1, 2, 3, 11, 17 ஆகிய தேதிகள் கரிநாட்களாகும். இவை மாறவே மாறாது.
12 மாதங்களில் கரிநாட்கள் :
சித்திரை முதல் பங்குனி வரை தமிழ் மாதத்தில் வரும் கரிநாட்கள் என்றைக்கு வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சித்திரை 6, 15
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 15, 19
? ஆகவே, இக்கரிநாட்களில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம், நீண்ட தூர பிரயாணம் போன்றவற்றை செய்தாலோ அல்லது தொடங்கினாலோ, அவை கெடுதலில் முடியும்.
? மேலும் அந்த கெடுதல் நமது வாழ்நாள் முழுவதும் நம்மை நிழல்போல தொடர வாய்ப்பு இருப்பதால் இவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.
? ஆனால், பூஜைகள் ஹோமங்கள் பரிகாரங்கள் ஆகியவற்றை கரிநாட்களில் செய்யலாம்.
மேலும் விருத்திக்கு வரக்கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை அன்று நடத்தலாம். உதாரணமாக கடனை அடைக்கும் பணியை மேற்கொள்ளலாம். ஏனென்றால் அன்றைக்கு கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது.