மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை!

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிவாலயங்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. கங்கை உள்பட பல நதிகளில் பக்தர்கள் புனித நீராடினர். உத்திரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜ், அயோத்தி, வாரணாசி என பல இடங்களில் மக்கள் அதிகாலையில் எழுந்து புனித நீராடினர். சூரிய உதயத்திற்கு முன்பு குடும்பத்துடன் கங்கையில் நீராடிய அவர்கள் சூரிய வழிபாடு நடத்தினர். கங்கை கரையில் சாதுக்கள் திரண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். உத்திரப்பிரதேசத்தில் உள்ள முக்கிய நகரங்களில் மக்கள் சிவன் கோயிலில் திரண்டு லிங்கத்திற்கு மலர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். கோரக்பூரில், கோரக்நாத் கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பு பூஜைகள் செய்தார்.

மொராதாபாத்தில் உள்ள சிவன் கோயிலில் பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். இதேபோன்று உத்தராகண்ட் மாநிலம் காத்திமா நகரில் உள்ள சிவன் கோயிலில் முதலமைச்சர் புஷ்கர் சிங் வழிபாடு நடத்தினார். பத்ரிநாத் நகரில் உள்ள சிவன் கோயிலில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் திரண்டு பாரத மாதாவுக்கு ஜே என்று முழக்கமிட்டனர். மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள சிவன் கோயிலில் சாதுக்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.

மத்தியப்பிரதேசம் போபால் நகரில் உள்ள கோயிலில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குடும்பத்துடன் சென்று வழிபட்டார். கடற்கரையோர நகரங்களில் மகா சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் மணல் சிற்பம் வரைந்து சிவனை வழிபட்டனர். மகா சிவராத்திரி தினத்தில் விரதம் இருப்பதும், கண் விழித்து சிவ தரிசனம் செய்வதும் பாவங்கள் போக்கி புண்ணியங்கள் சேர்க்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.