ஆரம்பமே சிக்கலில் சிக்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி!
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முன்னணி வீரர் ஜேசன் ராய் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 10 அணிகள் கொண்ட 15-வது ஐபிஎல் போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.இதில் ‘குஜராத் டைட்டன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்க சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் ஜபிஎல் போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ஜேசன் ராயை ரூ. 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது, ஷுப்மான் கில் தவிர டைட்டன்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஸ்பெஷலிஸ்ட் ஓப்பனராக பார்க்கப்பட்ட ஜேசன் ராய், ஜபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
சர்வதேச போட்டிகள் உட்பட பல போட்டிகளில் விளையாடிவரும் ராய், தொடர்ந்து பயோ-பபுள் பாதுகாப்பில் இருப்பதால் சோர்வாக உள்ளதுடன், குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத காரணத்தினால் நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரை ஒரு அணி ஏலத்தில் எடுத்த பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவது என்று ராய் முடிவு செய்வது இது இரண்டாவது முறையாகும். 2020 ஆம் ஆண்டில், டெல்லி கேபிடல்ஸ் அணி, ஜேசன் ராயை அவரது அப்போதைய அடிப்படை விலையான ரூ. 1.5 கோடிக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.