ஆயுத உதவியால் விளைவு மோசமாகும் என புடின் எச்சரிக்கை
பெலாரசில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கிய போதிலும், உக்ரைனில் நேற்று 5வது நாளாக ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் தீவிரமடைந்துள்ளன. மேலும், உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இது விளைவுகளை மோசமாக்கும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் 2வது பெரிய நகரமான கார்கிவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இதற்கிடையே, உலக நாடுகளின் ஆதரவு உக்ரைனுக்கு அதிகரித்ததன் காரணமாக, தனது நாட்டின் அணு ஆயுத படைப்பிரிவை தயார் நிலையில் வைக்க ரஷ்ய அதிபர் புடின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அண்டை நாடான பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வந்த உக்ரைன், வேறுவழியின்றி ஒப்புக் கொண்டது. அதன்படி, பெலராஸ் எல்லையில் ரஷ்யா, உக்ரைன் இரு நாட்டு தூதுக்குழு நேற்று காலை பேச்சுவார்த்தையை தொடங்கியது.
இது ரஷ்யாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேசிய ரஷ்ய அதிபர் புடின், ‘ஐரோப்பிய ஒன்றியம் ஆயுத உதவி செய்தால், விளைவும் மேலும் மோசமாகும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி, ரஷ்யாவின் மத்திய வங்கியை குறிவைத்து அமெரிக்கா நேற்று புதிய பொருளாதார தடையை கொண்டு வந்தது. இந்த தடையில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல உலக நாடுகள் இணைய உள்ளதாக தெரிவித்தது. இதன் காரணமாக, ரஷ்யாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் எதுவும் செல்லாததால் மக்கள் பணத்தை வைத்து செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.