இந்தியர்களை மீட்க உதவி கோரி ஹங்கேரி, மால்டோவா வெளியுறவு மந்திரிகளுடன் ஜெய்சங்கர் பேச்சு
ரஷியாவின் படையெடுப்பால் உச்சகட்ட போர் நடந்து வரும் உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். பெரும்பாலும் மாணவ-மாணவிகளாக இருக்கும் அவர்களை மத்திய அரசு அண்டை நாடுகள் மூலம் மீட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளுக்கு உதவுமாறு நேற்று ஹங்கேரி மற்றும் மால்டோவா நாடுகளுக்கும் இந்தியா கோரிக்கை விடுத்து உள்ளது. அந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை தொடர்பு கொண்டு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசினார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘ஹங்கேரி வெளியுறவு மந்திரி பீட்டர் சிஜ்ஜிர்ட்டை தொடர்பு கொண்டு பேசினேன். உக்ரைன்வாழ் இந்தியர்களை மீட்பதற்கு அளித்து வரும் உதவிகளுக்கு நன்றி கூறியதுடன், மேலும் உதவிடுமாறு கோரிக்கை விடுத்தேன்’ என கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில் அவர், ‘மால்டோவா வெளியுறவு மந்திரி நிகு போக்ஸ்குவையும் தொடர்பு கொண்டு நமது குடிமக்களை மால்டோவா எல்லக்குள் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரது பதில் மற்றும் உறுதியான ஆதரவுக்கு நன்றி’ என குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கிைடயே உக்ரைனில் வாழும் இந்தியர்கள் விசா இன்றியே போலந்துக்குள் நுழைய அந்த நாடு அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.