மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 மணிப்பூர் மாநிலத்தில் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி முதற்கட்டமாக இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, விஷ்ணுபூர், சுராசங்பூர் மற்றும் காங்போக்வி  உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. ஹெயின்காங் தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் பைரேன் சிங் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். தலைநகர் இம்பாலில் உள்ள பெண்கள் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அம்மாநில ஆளுநர் இல.கணேசன் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் பேசிய அவர், மணிப்பூர் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மணிப்பூர் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 38 தொகுதிகளில் 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் முதலமைச்சர் பைரேன் சிங் போட்டியிடும் ஹெயின்காங், துணை முதலமைச்சர் கேம்சம் போட்டியிடும் ஒரிபோக், காங்கிரஸ் மாநில தலைவர் லோகேஷ் சிங் போட்டியிடும் நம்போல் ஆகியவை முக்கிய தொகுதிகளாகும்.

மணிப்பூரில் சர்சந்துபோர் மாவட்டத்தில் உள்ள கேம் பிமில் கிராமத்தில் நேற்று குண்டு வெடித்ததால் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மணிப்பூரில் எஞ்சிய 22 தொகுதிகளுக்கு வரும் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.