அணு ஆயுத படைக்கு அதிபர் புடின் உத்தரவு; ரஷ்யாவுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம்.!

அணு ஆயுத படையை தயார் நிலையில் வைத்திருக்க அதிபர் புடின் உத்தரவிட்ட  நிலையில், அதற்கு ஐ.நா, நேட்டோ, சர்வதேச நாடுகள் கண்டனம்  தெரிவித்துள்ளன. இதற்கிடையே அடுத்த 24 மணி நேரம் குறித்து உக்ரைன் அதிபர்,  இங்கிலாந்து அதிபரிடம் பேசியிருப்பது பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படைகளின் தாக்குதல் இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை நடந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 14 குழந்தைகள் உட்பட 352 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 1,684 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை நடந்த சண்டையில், சுமார் 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. மேலும், 146 டாங்கிகள், 27 விமானங்கள் மற்றும் 26 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன. உக்ரைனுக்கு 5.4 மில்லியன் டாலர் நிவாரண உதவியை அமெரிக்கா விடுவித்துள்ளது. பல நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பிய உக்ரைன் மக்களின் எண்ணிக்கை 3.86 லட்சமாக உயர்ந்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இன்று இரவு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் பெலாரஸ் நாட்டிலா? அல்லது வேறு பகுதியில் நடக்குமா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரைன் விவகாரத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் சிறப்பு அவசர அமர்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம், நேற்றிரவு நடந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 1 (ரஷ்யா) வாக்குகளும் கிடைத்தன. இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தன. இதற்கிடையே உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதன்மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் விமானங்கள் பறப்பதற்கு 17 நாடுகள் அதிரடி தடை விதித்துள்ளது. நாளுக்கு நாள் உலக நாடுகள் ரஷ்யா மீது கொடுக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவின் ஆதிக்கப் போக்கை கண்டிக்கும் விதமாக அந்நாட்டு அரசு ஊடகங்களின் கணக்குகளை சமூக வலைதளமான ஃபேஸ்புக் முடக்கியுள்ளது. ரஷ்யா மீது தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இவ்வாறு சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு சிறிது சிறிதாக நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சர்வதேச ஜூடோ தற்காப்புக்கலை அமைப்பின் கவுரவ தலைவராக பதவி வகித்த, ரஷ்ய அதிபர் புடினிடம் இருந்து அந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் பலவகையில் அழுத்தம் கொடுத்தும், ரஷ்யா தனது போர் யுக்திகளை உக்ரைனுக்கு எதிராக தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக ரஷ்ய அதிபர் புடின், ‘மேற்கத்திய நாடுகள் நம்மை விரோதிகளாகக் கருதுகின்றன. பொருளாதார ரீதியாக நிறைய தடைகள் நம் மீது விதிக்கப்பட்டுள்ளன. இவை சட்டவிரோதமானவை. நேட்டோ நாடுகளும் நம் நாட்டுக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பரப்பி வருகின்றன. அதனால், பாதுகாப்பு அமைச்சர் அணு ஆயுத தடுப்புப் படைகளை தயார் நிலையில் வைக்குமாறு நான் உத்தரவிடுகிறேன்’ என்று கூறினார். இதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அழுத்தமாக சரி என்றார். இந்த உத்தரவும், இசைவும் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளைக் கடத்தியுள்ளது.

உலகிலேயே இரண்டாவது பெரிய அணு ஆயுத பலம் கொண்ட ரஷ்யாவின் இந்த முடிவு, உலகின் பல நாடுகளாலும், சர்வதேச அமைப்புகளாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும், புடினின் அறிவிப்புக்கு நேட்டோ கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேட்டோ வெளியிட்ட அறிவிப்பில், ‘அணு சக்தி படைகள் தயார் நிலையில் இருக்கும்படி புடின் அறிவித்து இருப்பது, மிகவும் ஆபத்தான விஷயமாகும். பொறுப்பற்ற முறையில், உலகை அச்சுறுத்தும் வகையில் ரஷ்யா தன்னால் முடிந்ததைச் செய்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளது. அதேநேரம் ஐநா செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்ய அதிபரின் அறிக்கையானது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார். அணு ஆயுதங்கள் குறித்து புடின் பேசி வருவது, உக்ரைன் பிரச்னையை திசை திருப்பும் முயற்சியாகும் என்று இங்கிலாந்து கூறியுள்ளது. மேலும், அமெரிக்கா தனது ஏவுகணை படைகளை விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் வியூக ஏவுகணைப் படையில், அணு ஆயுதங்கள் மட்டுமின்றி ஒலியின் வேகத்தை விட பத்து மடங்கு வேகமாக தாக்கும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நிலவரபடி, நேற்றிரவு கீவ், கார்கிவ் ஆகிய இரண்டு நகரங்களும் அமைதியாக இருந்தன.

ஆனால், இன்று அதிகாலை முதல் கீவ் மற்றும் கார்கிவ் ஆகிய இரண்டு நகரிலும் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன. இதுதொடர்பாக உக்ரேனிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களில், கீவ்வில் இருந்து 40 மைல் தொலைவில் ரஷ்ய தரைப்படைகள் வரிசைகட்டி நிற்கின்றன. அதனால், முழு தாக்குதலுக்கும் ரஷ்யா ஆயத்தமாகி வருவதை காட்டுகிறது. இதற்கிடையே நேற்றிரவு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பேசினார். அப்போது உக்ரைன் படைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், ரஷ்ய தாக்குதலை எதிர்கொண்டு போராடும் உக்ரைன் மக்களின் வீரத்தை பாராட்டியும் பேசியுள்ளார். அதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, ‘அடுத்த 24 மணிநேரம் உக்ரைன் நாட்டிற்கு மிகவும் முக்கியமான காலமாக இருக்கும்’ என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுத படையை தயார் நிலையில் வைத்திருக்க அதிபர் புடின் உத்தரவிட்ட நிலையில், ரஷ்யாவுக்கு ஐ.நா, நேட்டோ, சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே அடுத்த 24 மணி நேரம் குறித்து உக்ரைன் அதிபர், இங்கிலாந்து அதிபரிடம் பேசியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.

Leave a Reply

Your email address will not be published.