சீனாவின் பெய்ஜிங் நகரில் கட்டுப்பாடுகள் தீவிரம்!
சீனாவில் உள்ள உகான் நகரில் தான் முதன் முதலாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ் தொற்று. இந்த நோய்க்கான மருந்தை விஞ்ஞானிகள் ஒருவழியாக உருவாக்கி இருக்கும் சூழ்நிலையில் தற்போது கொரோனா உருமாற்றம் அடைந்து மக்களை பீதியடைய வைத்துள்ளது.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. பொதுவாக எந்த ஒரு நோய்க்கிருமியும் உருமாற்றம் அடைவது இயல்பு தான் என்றும் கொரோனா வைரசும் அதுபோல தான் தற்போது உருமாற்றம் அடைந்திருக்கிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த புதிய வகை கொரோனா ஆபத்தானது என்று கூறுவதற்கான சான்றுகள் எதுவும் தென்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களாகச் சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் தலைதூக்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த வாரங்களில் இதுவரை 21 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீன தேசிய சுகாதார ஆணையம் இந்தத் தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது சீனாவில் விடுமுறை காலம் என்பதால் கொரோனா தொற்று பரவலை தடுக்க சீன அரசு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது. போர்க்கால முறையில் மக்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 18ஆம் தேதி முதல் பெய்ஜிங் நகரத்தில் 16 நோய்த்தொற்றுகள் மற்றும் மூன்று அறிகுறி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் ஷுன்யீ பகுதியில் பதிவாகி இருந்தன. இதனால் கூரியர்கள் குடியிருப்பு வளாகங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது ஷூன்யீ மாவட்டத்தில் 10 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது
பெய்ஜிங் அரசாங்கம் கோயில் கண்காட்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்ற பெரிய அளவிலான கூட்டங்களை ரத்து செய்வதாகவும், ஆண்டு இறுதி கொண்டாட்டங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், நேரடி இசை நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு புத்தாண்டு தின ஒளி நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகள் முதல் சிறப்புவாய்ந்த சிங்குவா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் வரை வெளி நபர்கள் உள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரசூல் மொய்தீன்
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.