ஆனந்த் சுப்பிரமணியனை கைது செய்தது சிபிஐ!!

சென்னை: தேசிய பங்குச்சந்தை மோசடி வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்தது. தேசிய பங்கு சந்தையின் (என்எஸ்இ) தலைவராக, கடந்த 2013ம் ஆண்டு 2016ம் ஆண்டு வரையில் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் பதவியில் இருந்தபோது, இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்த முக்கிய ரகசியங்களை இமயமலையில் இருப்பதாக கூறப்படும்  சாமியாரிடம் கூறி, ஆலோசனைகள் பெற்று செயல்பட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் பங்கு சந்தையின் அன்றாட ஏற்ற இறக்கங்கள், முன்கூட்டிய கணிப்புகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக  கூறப்படுகிறது. மேலும், இந்த சாமியாரின் உத்தரவின் பேரில் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தனது ஆலோசகராகவும், குழு செயல்பாடு கண்காணிப்பு அதிகாரியாகவும் ரூ.1.68 கோடி சம்பளத்தில் விதிமுறைகளை மீறியும் நியமித்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவர்கள் இருவரும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக செபி நடத்திய விசாரணையின் பேரில், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு  ரூ.3 கோடியும், ஆனந்த் சுப்பிரமணியன், தேசிய பங்கு சந்தையின் இன்னொரு முன்னாள் தலைவர் ரவி நாராயண் ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளில் கடந்த வாரம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். சித்ரா ராமகிருஷ்ணா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க  சிபிஐ சார்பில் லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. இந்த கோ-லொகேஷன் விவகாரம் தொடர்பாக சிபிஐ ஆனந்த் சுப்பிரமணியத்திடம் விசாரணை நடத்திவந்தது. இதில் சிபிஐ அதிகாரிகளுக்குஆனந்த் சுப்பிரமணியன் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை, இமயமலையில் இருக்கும் சாமியார் தொடர்பான கேள்விகளுக்கும் ஆனந்த் பதில்அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் தங்கியிருந்த ஆனந்த் சுப்பிரமணியத்தைநேற்று இரவு கைது செய்தனர். இன்றுகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் டெல்லிக்கு விசாரணைக்காக அழைத்துச்செல்ல உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.